பக்கம்:அஞ்சலி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 லா. ச. ராமாமிருதம்

ஆனா அவரு இப்போ இருக்கற மாதிரியில்லே. இப்போத்தான் ரெண்டுபேருமே, கோயில் உற்சவத்துலே முன்னாலே ஆடிக்கிட்டுப் போற பூதம்மாதிரி பெருத்துட்டோமே! அதுவும் அவரு, ஆனாலும் கைலாச வாகனம், மாதிரி குறுக்கே ஒரேயடியா அகண்டுட்டாரு. இப்போ ஆள் ஒக்கார ஒருநாழி, எழுந்திருக்க என்பாடு உன்பாடு. ஆனால், புடுங்கியெடுத்த மாதிரி மூஞ்சிலே ஒரு முரட்டுத் தனம் இன்னமும் இருக்குது. இந்தக் கண்ணாலே இப்படிப் பார்த்தாலும், இப்போ இந்த உள்பார்வையிலே இந்த வீட்டுள்ளே நான் நுழைஞ்சப்போ எப்படி இருந்தோமோ அப்படியேதான் இருக்கோம். இது ஒரு ஆச்சரியமில்லே?”

அவளைத் தூக்கி எதிரே அவள் புருசன் நிறுத்தினார். கண்ணை நிமிர்ந்து பார்க்கத் திகிலாயிருக்குது. அங்கே கோவம்னு இல்லே, ஆசைன்னு இல்லை. ஆனா ஒரு நெருப்பு. அதுக்கு உடம்பு பயங்கண்டு கூசினாலும் உள் நினைவு தைரியமா எதிர்முழிப்பு முழிக்குது பிடுங்கின வேராட்டம். முண்டும், முடிச்சுமாய், நரம்பு புடைச்ச மாரில் சுருட்டை சுருட்டையா மயிர் என்னை அவர் புடிச்சு இறுக்கறப்போ, அவர் தோளிலே நான் மாவாய் குழைஞ்சு பூட்டாப்போல் இருந்தது.

அந்த உடம்பிலே, அந்த முகத்திலே அழகில்லே, மெதுவில்லே, வெறும் பலந்தான். அதனாலே அதுக்குக் குறைவில்லே. எத்தனையோ நாள் ராவுலே, இருட்டுலே, ஆசை மூச்சிறைப்பில், அந்த உடம்பைத் தேடி உணர்றப்போ, அதில் ஒடத்தில் ஒடுங்கறமாதிரி ஒரு பத்திரம், தெம்பு, தைரியம், எல்லாம் இருக்குது. அதன்மேல் எனக்கு ஒரு அதிகாரம்கூட......தோணுது.

“ஆனால் இந்த பகல் வேளையிலே அவங்கவங்க வேலையிலே அவங்கவங்க முனையறப்போ, ஆளே மாறிப்பூடறாங்க. சில நேரங்களிலே வேத்தாள் மாதிரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/130&oldid=1025446" இலிருந்து மீள்விக்கப்பட்டது