பக்கம்:அஞ்சலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 லா. ச. ராமாமிருதம்

“இவாள் எல்லாம் ஏன் கொழந்தை குட்டிக்கு ஆசைப் படறாளோ தெரியல்லே!”

அப்படி அவங்க சொன்னதுதான் எனக்கு என்னன்னு தெரியல்லே. ஒரு அழுகை வந்திருச்சு பாரு... விக்கி, விக்கி உடம்பு அடக்க முடியல்லே, அப்படிக் குலுங்குது.

பெரியம்மாவுக்குத் திக்கினு ஆயிடுச்சு. ஆனால் சின்னம்மா என்ன கண்டுகிட்டாங்களோ தெரியல்லே, சரசரன்னு உள்ளே போய் ஒரு துணி மூட்டையை எடுத்து வந்து, என் மடியிலே வெச்சாங்க. அதிலே, ஒரு பிள்ளைப் புழு வாயை ‘ஆவ், ஆவ்’ணு திறந்திட்டு நெளியுது.

அதை அப்படியே வாரி மாரோடு அணைச்சுட்டேன், பாலு கொட்டுது. கொழந்தை வாயை வெச்சுக் கவ்விக் குடிக்கற சொகத்துலே நான் என்ன செய்தேன்னு எனக்கே தெரியாது. மார்த்துணி கயண்டு கீழே நழுவிட்டது நெனைக்கிறேன். ரவிக்கை முடிச்சை அவுத்துட்டேன், கட்டின பாலு கயண்டு ஓடுது அம்மாடி! அப்பாடி! சொகத்துலே எனக்குக் கண்னு சொருவிப்போச்சு. செவுத்துலே அப்படியே சாஞ்சிட்டேன். என் கண்ணுலே தண்ணி சில்லுன்னு ஓடிக்கிட்டேயிருக்குது. நான் வெக்கங் கெட்டுப் பூட்டேன். என் அலங்கோலத்தைச் சின்னம்மா பாத்து அவசர அவசரமா ஓடிப்போய் வாசக்கதவைச் சாத்தித் தாப்பாள் போட்டாங்க.

பையனுக்கு மழைத் தப்பளையாட்டம் வவுறு விடாய்ச்சிக்கிட்டாலும் புடி விடல்லே. குடிக்கிறான் அட்டையாட்டம் ஒட்டிகிட்டு. குடிக்கட்டும், குடிக்கட்டும், நல்லா குடிக்கட்டும், நான் பெத்தாத்தான் மவனா? நான் பேத்ததுங்கதான் குளியிலே ஒண்ணையொண்ணு கட்டிகிட்டு உறங்குதே எங்க பாலை இதுக்குக் கொடுன்னுதான் அப்படி உறங்குதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/134&oldid=1025667" இலிருந்து மீள்விக்கப்பட்டது