பக்கம்:அஞ்சலி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 157

அவள் மனம் நிம்மதியிலாது அலைந்துகொண்டிருந்தது, அவள் வாசிப்பிலேயே தெரிந்தது. விரல்களினடியில் இருந்து ஸ்வரங்கள் துரிதமாய்ப் புறப்பட்டன. கூட்டுக்குள் கூட்டமாய் அடைபட்டு அலையும் சிட்டுக்குருவிகள்போல் அவை தவித்தன.

“அம்மா நீ என்னத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“ம்—ம்—ம்?—”

“அம்மா நான் கேட்கிறேன், நீ என்னத்தை. நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

“உன்னைத்தான்னு வெச்சுக்கோயேன்.”

என் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டாள்.

“என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

“என்னடா கண்ணா இன்னிக்கு என்னை இப்படிப் படுத்தறே?”

“என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நான் தெரிந்துகொள்ளக் கூடாதா?”

“நீ எனக்கு உண்டானதை நினைச்சுண்டேன்—”

அவள் அப்படிச் சொல்லும்பொழுதே, ஜன்னலுக்கு வெளியே மாமரத்தை உதைத்துக்கொண்டே அடி வானத்தில் ஒரு நட்சத்திரம் உதயமாயிற்று. ஒரு பெரிய கற்கண்டு கட்டியளவுக்கிருக்கும். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால் அவள் வார்த்தைகளின் சப்தங்களை மாத்திரம் வாங்கிக்கொண்டேனேயொழிய அவளைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லை.

“உ—ம்—ம், என்னம்மா சொன்னாய் நான் கவனிக்கவில்லை—”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/167&oldid=1033473" இலிருந்து மீள்விக்கப்பட்டது