பக்கம்:அஞ்சலி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 179

என் கைகள் முஷ்டித்தன. என் உடலே என் ஆத்திரத்தில் கிடுகிடென ஆடிற்று.

“அப்பா நீங்கள் வாழச் சகிக்காதவர். உங்களுக்கு உங்கள் அதிகாரந்தான் முக்கியம். அம்மாவைக் கொன்றதே நீங்கள் தான். நீங்கள் அவளைக் கொல்லாமலிருந்தால் அம்மா இப்போ உயிரோடிருப்பாள் தெரியுமா?—”

அப்பா மெதுவாய் சிலை திரும்புவதுபோல் திரும்பினார். அவர் முகம் என் கண்ணைக் கூசிற்று. கையை ஓங்கினார்.

“நீங்கள் கொலைகாரர் கொலைகாரர் கொலைகாரர்!”—என் தொண்டை க்றீச்சிட்டது. நான் என் வசத்திலில்லை. வாயில் நுரை தளும்பிற்று. எனக்குக் களை போட்டுவிட்டது. படுக்கையில் அப்படியே சாய்ந்தேன்.

அப்பா ஒன்றுமே பேசவில்லை. ஒங்கியகை மெதுவாய்க் கீழே இறங்கிற்று. ஏற இறங்க, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவர் பார்வை என்மேல் ஒடிற்று. பார்வைக்குப் பார்வை நானும் ஈடு கொடுத்தேன். எங்கிருந்து எனக்கு இவ்வளவு அசட்டு, முரட்டு தைரியம் வந்தது?

ஜன்னலுக்கு வெளியே மாமரத்திலிருந்து ஒரு கொக்கு எழும்பிப் பறந்து சென்றது. காலையின் பொன் வெயிலில் அதன் வெள்ளைக் கழுத்தும் கால்களும் ப்ரகாசித்தன. அப்படியே திரும்பி அப்பா அறையை விட்டுச் சென்றார்.

நான் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். அப்பா வீட்டைவிட்டு வெளியே போய்க் கொண்டிருந்தார்.

“அப்பா! அப்பா!!—” துக்கம் தொண்டையை அடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/189&oldid=1033485" இலிருந்து மீள்விக்கப்பட்டது