பக்கம்:அஞ்சலி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 181

 இதுதான் என் தவிப்பு. இது மோகமுமல்ல. ஆசையுமல்ல. உள்ளத்திலே புழுத்த புழு, அவள்மேல் ஆசை, பாசம், மோகம் எல்லாம் ஓருருவாய் என் வயிற்றுள் பாம்புபோல் சுருண்டு உட்கார்ந்து என் தெம்பு, என் வலிமை, என் நினைவு, என்னையே தனக்கு ஆகாரமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது. இந்த ஸ்மரிப்பிலிருந்து, எவ்வளவு முயன்றும் என்னால் உதறிக்கொள்ள முடியவில்லை. இறக்கைகளில் கல்லைக் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் பறக்கப் பார்ப்பதுபோல் என் ப்ரயத்தனங்கள் பயனற்றனவாய், அவலக்ஷணமாய், அவமானத்தில் முடிந்தன.

தாயின் மார்பில் கட்டிவிட்ட பால்போல், என் நெஞ்சில் கனமாய் அழுத்திக் கொண்டிருக்கும் பாசத்தைத் தணித்துக்கொள்ள செய்கைகளும் பேச்சுக்களும் மனதில் எழுந்தன. பிறர்க்கு ஒருவேளை அவை விரஸமாயுமிருக்கலாம். எனக்கு அவை சர்வ இயற்கையாயும் தவிர்க்க முடியாதனவாய்க்கூட இருந்தன. என் நெஞ்சின் நிலையில் எனக்கு அப்படி இருந்தாலும் அவளுக்கும் அப்படியிருக்க வேண்டாமா? அந்தப் பயத்தில், வெட்கத்தில், என்னை நான் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருத்தேன். இது ஸகித்துக் கொள்ளும் கஷ்டமாயில்லை.

காயத்ரீ—

ஓம்பூ: ஒம் புவ: ஓம்ஸுவ:—

என் மூச்சு.

அவள் எங்குச் சென்றாலும் என்ன செய்தாலும் என் பார்வை அவளையே பின்தொடர்ந்தது. இது என்னையே அறியாது படிந்துவிட்ட பழக்கமாயும் போய்விட்டது. ஒரு சமயம் அறையின் ஒரு மூலையில் குனிந்தபடி ஏதோ காரியமாயிருந்தவள் சட்டெனத் திரும்பி, நேரே என்னை நோக்கி வந்தாள். அவன் கன்னங்களில் சிவப்பு திட்டாய்ப் பூத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/191&oldid=1033486" இலிருந்து மீள்விக்கப்பட்டது