பக்கம்:அஞ்சலி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206 லா. ச. ராமாமிருதம்

“என் பெற்றோர்களுக்கு மாத்திரம் சந்ததி ஏற்படவேயில்லை. வேண்டிக்கொள்ளாத தெய்வம் இல்லை. செய்யாத பூஜை, தருமங்கள், செலுத்தாத பிரார்த்தனைகள் இல்லை. அந்தக் காலத்தில் கால்வயிற்றுக் கஞ்சிக்கு லாட்டரி அடித்தாலும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஒரு குழந்தையில்லாவிட்டால் அது ஒரு பெரிய ஈனம். நிறைய குழந்தை குட்டிகளோடு வாழும் நாலைந்து ஓரகத்தியர் களுக்கிடையில், கூட்டுக் குடும்பத்தில், வீட்டுக்கு மூத்த மருமகள் மலடாக வளைய வந்தால் இடி சொல்லுக்கும். மறைவான கேலிக்கும் கேட்கணுமா? ஆனால் என் அம்மா அதிகமாய்ப் பேசமாட்டாளாம். சில சுபாவங்கள் அப்படி; எல்லாவற்றிற்கும் மெளனமான புன்னகை. அவரவர்களுக்கு இஷ்டமான பதிலையும் அர்த்தங்களையும் அவரவர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். மக்கு என்றும் நினைத்துக் கொள்ளலாம்.

“ஆனால் ஒருநாள் என் தாயும் கருத்தரித்தாள் என்று நிச்சயமாயிற்று. இதைப்பற்றி என் தாயாரைவிட வேறு யாரும் ஆனந்தப்பட்டிருக்க முடியாது. நிறை கர்ப்பத்தில் என் தாய் விளிம்புகட்டிய குடம்போல், சமாதியை யொத்த பரவச நிலையில் வளைய வந்தாள் என்று சொல்லக் கேள்வி. யாருடனும் பேசாமல், முகத்தில் தேங்கிப் போன புன்னகையுடன், தனக்குள் தானே தன் உதய ராகத்தை மெதுவாய்ப் பாடிக்கொண்டு, தன் உள் கண்களால் தன் கர்ப்பத்திலிருப்பதைத் தான் தரிசித்துக்கொண்டு, தன்னில்தான் லயித்து.........

“பிரசவ வேளையும் வந்துவிட்டது. இடுப்பு வலியும் எடுத்துவிட்டது. அம்பட்டனின் தாயார் வந்துவிட்டாள். அவள்தானே ஊருக்கெல்லாம் மருத்துவச்சி! வேறு நேரங்களில் வாசற்படி தாண்டி உள்ளே வர அனுமதியில்லா விட்டாலும், இப்போ அவள் இட்டதுதான் சட்டம். ரேழியறையை ஒழித்துக் கொடுத்தாகிவிட்டது. பிரசவக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/216&oldid=1026488" இலிருந்து மீள்விக்கப்பட்டது