பக்கம்:அஞ்சலி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212 லா. ச. ராமாமிருதம்

“காயத்ரீ?”—

மெதுவாய்க் கூப்பிட்டேன்.

மூடிய கண்களை அவள் திறக்கவில்லை.

“I hate you!”

கடித்த பற்களிடையிலிருந்து வார்த்தைகள் சிறிக் கொண்டு வந்தன.

“என்னை மன்னித்துவிடு—”

எனக்குக் களை மேலிட்டது; தள்ளாடிக்கொண்டே வெளியே சென்றேன்.

நான் நாற்காலியில் சாய்ந்துகொண்டிருக்கிறேன். ஜன்னலுக்கு வெளியே வேறு உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பல வர்ணங்கள் தோய்ந்த பட்டுப் படுதாப்போல் மாலை, தோட்டத்தில் இறங்குகிறது. நலுங்கும் திரையின் மடிகள் போலுமே காற்றில் அந்தி மிளிர்கிறது.

காயத்ரீ மெதுவாய் மாடிப்படிகளிலிறங்கி வருகிறாள். அவள் அப்படி வருகையில், மரத்திலிருந்து புஷ்பம் நேரே உதிர்வதை நினைவூட்டுகிறாள். அறையுள் மெதுவாய் வந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி ஜன்னலுக்கு வெளியே காட்சியைச் சிந்தித்து நிற்கிறாள். மெளனம் அழகிய பூக்கிண்ணம்போல் எங்கள் இரு வரையும் ஏந்திக்கொண்டு நிற்கிறது.

அவள் விழியோரங்களில் கண்ணிர் புறப்படுகிறது. துளிகள் கன்னங்களில் வழிகின்றன. நான் சும்மாயிருக்கிறேன். ஓடிவந்து என் காலடியில் மண்டியிட்டு வீழ்ந்து, என்மடியில் முகத்தைப் புதைத்துக்கொள்கிறாள். வழு வழுத்த அவள் கூந்தலில் என் விரல்கள் புதைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/222&oldid=1033510" இலிருந்து மீள்விக்கப்பட்டது