பக்கம்:அஞ்சலி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 253

ஏகா, உன் பெருமையை நீ அறியாய். அதுவேதான் உன் தகுதி. உன் நினைப்பே அற்றுப்போனாய், உன்னில் நீ நிறைந்தாய். நானும் உன்னுள் அடங்கினேன். ஏகா, பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன. அதனால் மணக்கின்றன. நீ என்னை நினைத்தால்தான் நான் இல்லை. இருந்துகொண்டேயிருக்கிறேன். வேளை வந்ததும் வெளிப்படுகிறேன். இது என் விதி.

“வேண்டாம், வேண்டாம்!” எனக்கு தலை சுத்தறது.

“ஏகா தூங்கறையா?”

“யாரது? ஒ நீங்களா—ஊ—ஹு—ம் விளக்கைப் போடாதேங்கோ, இங்கே வாங்கோ.”

“ஏகா, காலையிலிருந்து ஒரு பருக்கைக்கூட நீ முகர வில்லையே!”

“எனக்கு ஒன்றும் வேண்டாம், எனக்குப் பசியேயில்லை. உங்கள் பசிதான் எனக்கு இப்போ. கிட்ட வாங்கோளேன். என்னை அனைச்சுக்கோங்கோளேன் இறுக—இன்னும்—ஊஹும் நீங்கள் என்மேல் படவில்லை.”

“ஏகா, உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”

“நாம் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவருக்கொருவர் எட்டாயிரம் மைல் எட்டியிருக்கிறோம்.”

அவளிடமிருந்து சிரிப்பு பீறிட்டது. க்றீச்சிட்டு அலை பாய்ந்த அதன் உருட்டு, கண்ணாடிவிரியன் போன்ற நெளிவு, இருளில் பளபளத்தது.

“ஏகா, ஏன் சிரிக்கிறாய்?”

அவள் சிரிப்பு சட்டென அடங்கிற்று.

“ஏகா, உன்னைக் கடவுள்தான் காப்பாற்றணும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/263&oldid=1033539" இலிருந்து மீள்விக்கப்பட்டது