பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அண்ணாவின் ஆறு கதைகள்


வேண்டும் என்று விதியா? சட்டமா? காதலுக்குப் பிறகு வேலையே இல்லையே. சீச்சீ! கதை எனக்குப் பிடிக்கவில்லை”

“கேளடி மேலே! அதற்குள் உன்னுடைய மெடலைக் கொடுக்க மறுக்கிறாய். பெரும்பாலும் அந்த அரசன் எண்ணியபடி தானே நடக்கிறது. இராஜகுமாரி இராஜகுமாரனைத்தானே மணம் செய்துகொள்கிறாள். உன்வரையிலே பாரேன். என்ன நடக்கும்? நீ ஒரு ஜெமீன்தார் மகள், இன்னொரு ஜெமீன்தாரன் மகனைத்தானே நீ கலியாணம் செய்து கொள்வாய்?”

“அது தான் தப்பு! என்னை நீ சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. என்னைப்பற்றியும் உனக்குத் தெரியவில்லை, காதலைப்பற்றியும் உனக்குத் தெரியவில்லை”

“காதலிலே நீ கரை கண்டவள்! யாராவது ஒரு ஜெமீன்தாரன் மகனைக் கலியாணம் செய்துகொள்ளாமல், உங்கள் தோட்டக்காரன் மகனைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா?”

“தோட்டக்காரன் மகன் தானா? ஏன், எனக்குக் காதல் ஏற்பட்டால், எங்கள் மந்தையிலே மாடு மேய்ப்பவனைக்கூட நான் கலியாணம் செய்து கொள்வேன்”

"ஓஹோ! சரி, சரி, நீ பெரிய காதல் சுவை அறிந்தவள், உன் கதையை நடக்கிறபோது பார்ப்போம், நடந்த கதையைக்கேள். என்னமோ அந்த பைத்தியக்காரன் அப்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டு இறந்தான். உடனே, மூவர் தானே அரண்மனைக்குப் பொறுப்பாளியானார்கள். அவர்கள், எப்படியாவது அதிசயத்தை அவள் இஷ்டப்படும் கலியாணம் செய்து கொள்ளும்படி செய்து விட்டு, ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று சதி செய்யத் தொடங்கினார்கள். காதலின் மேன்மையைப் பற்றிய கவிதைகளை யெல்லாம் கொடுத்தார்கள், படிக்க. காதல் ரசமுள்ள நாடகங்களை அரண்மனையிலே நடத்தச் செய்து அதிசயத்தைக் காணச் செய்தார்கள். காதலை விளக்கும் சித்திரங்-