பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறகுதான் நான் பரிமளத்துடன் வாழ முடிந்தது. எனக்குத் துரோகம் செய்த சீமானே கண்டு மலைக்கும் படியான மாளிகையிலே உலாவமுடிந்தது. [தேவர் தலையில் கைகளால் மோதிக்கொண்டு கதறு கிறார். சொர்ணத்தின் மனம் இளகிவிடுகிறது. அருகே சென்று அவர் கைகளைப் பிடித்திழுத்து) சொ: அழாதே! கண்ணே! உன்னை நான் அதிகமாகத்தான் வாட்டிவிட்டேன். பழுக்கக் காய்ச்சிய சொற்களை வீசினேன்! ஆனால் அவை, என் வேதனையின் விளைவு! இதோ பார்! இல்லை! (முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு) கொஞ்சம் சிரி! அந்தப் பழைய புன்னகை! அந்தக் காலத்துப் பிரேமையில் கொஞ்சநஞ்சம், மிச்ச மீதி, விட்டகுறை தொட்ட குறை? [தேவரின் சோகத்தை நீக்க விளையாடுகிறாள். கொஞ்சிப் பேசியபடி. தேவர் ஆனந்த மடைகிறார்.] சொ: ஆ! முகத்திலே இப்போதுதானே பிறந்தது. சந்தோஷம் இப்படிக் கொஞ்சிக் குலவ நான் சித்தமாக இருந்தேன்.என் தேவன்தான் வரம் தரவில்லை. கண்களைத் துடைத்துக்கொள். இதோ முந்தானையால் [முந்தானையால் துடைக்கிறாள்.] மிட்டாதாரர், இந்தச் சேலையை நான் கட்டிக்கொண்டதும் வெட்டிவேர் அத்தர் தெளிப்பார் இதிலே! இந்தக் கண்ணீருக் குள்ள மதிப்பு அந்த அத்தருக்கு ஏது? இனி உனக்கு நான், எனக்கு நீ! சரிதானா? மிட்டாதாரருக்கு மட்டும் தெரியக்கூடாது. அவர் கண்களிலே மட்டும் படக்கூடாது. ஆனால், நீதான் ஆசைநாயகன், என் இன்பக் களஞ்சியம். (இந்தச் சாகசம் நடைபெறும் நேரத்தில் மிட்டா தாரர் தற்செயலாக அங்கே வந்துவிடுகிறார். கோபம் தலைக்கேறுகிறது. கைத் தடியால் ஓங்கி அடிக்கிறார் சொர்ணத்தின் முதுகில்.] மி: நான் குருடனல்ல! குடிகெடுத்தவளே! உன் ஆசை நாயகனா இந்த நாய்! அடே! கருணாகரா, எவ்வளவு திமிர்! அடி காதககி!

45

45