பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


'முற்காலப் புலவர்கள் என்ன சாமான்யமானவர்களா? அகத்தியன் பரம்பரையில் வந்தவர்கள் அறியாமலா கூறியிருப்பர்' என்று ஆர்ப்பரிப்பதும், 'வசிஷ்டர் வாக்கு வேதவாக்கு' என்று போதனை செய்வதும், நம்பினவருக்குத்தான் மோட்சம், நம்பாதவர்க்கெல்லாம் நரகம் என்று பயமுறுத்தியும், பண்டைய ஏடுகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி, அவற்றையே கற்று, தமிழர்கள் இலக்கியத் துறையிலே முன்னேறாது காலத்திற்கேற்ற கருத்தமைந்த இலக்கியங்களை--புதுப்புது இலக்கியங்களை உண்டாக்காது, பழமையில் மூழ்கித் தவிக்கின்றனர்.

🞸🞸🞸

பழமை! பழமை என்று எதற்கெடுத்தாலும் பேசுகிறார்கள்! பழைய புராணம், பழையகாலம், பழைய பாடல்,பழைய முறை, பழைய கருத்து, பழையமொழி என்றெல்லாம் கூறி, எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

🞸🞸🞸

பழமை! பழைய ஏடுகள், பழைய கருத்துக்கள், பண்டை இலக்கியங்கள் தான் முடிந்தவை--சிறந்தவை என்ற நிலை மாறி, புதிய இலக்கியங்கள் தோன்ற வேண்டும். எழுதப்படவேண்டும், இன்று!

🞸🞸🞸

இயற்றமிழ் இலக்கியத்தில், பெரும் பகுதி நாட்டு மக்களுக்குத் தெரிந்துள்ள, தெரியப்படுத்தப்பட்டுள்ள பலவும், புராண ஏடுகளாகவும், புண்ணிய காதைகளாகவும், இதிகாசங்களாகவும், பகவத் லீலைகள் பற்றியதாகவும் தான் இருக்கின்றன!

🞸🞸🞸