பக்கம்:அண்ணா காவியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னேற்றப் படலம்


நீலமேகம் முன்னிலையில் பழந்தொண்டர்கள்

நெஞ்சொடிந்து சென்னையிலே கூடி னார்கள்!

சீலமுடன் வேறுகட்சி துவங்கிப்-பேரைத்

திராவிட முன்னேற்றக் கழகம் என்போம்!

காலமெலாம் போற்றிவந்த கொடிதான் ஆனால்

கருமைநிறம் மேல்பாதி, சிவப்பு கீழே!

கோலமிகும் பெரியார்தான் தலைவர்; சொன்ன

கொள்கைகளே நமக்குநெறி என்றார் அண்ணா.



ஆயிரத்தொள் ளாயிரத்து நாற்பத் தொன்பான்

அருந்தந்தை பெரியாரின் பிறந்த நாளில்...

தாயினும்மே லாய்வளர்த்த கழகம் விட்டுத்

தனிக்கட்சி கண்டதொரு விந்தை யன்றோ?

சேயிவரை வாழ்த்துதல்போல் மழையும் பெய்யச்,

சிந்தைநொந்தோர் இராபின்சன் பூங்கா தன்னில்.

நீயிருந்த நாற்காலி!காலி யென்றே...

நிறுத்தாமல் கண்ணீரைச் சிந்திச் சொன்னார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/104&oldid=1079738" இலிருந்து மீள்விக்கப்பட்டது