பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அதிகமான் நெடுமான் அஞ்சி

கோணாதவேலையுடைய வீரர் பெருமகன் பாதுகாப்பிலே இருக்கிறான். நீங்கள் இப்போது பார்க்க இயலாது.

...மேல்நாள்
கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண்
நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக்
கருங் குரல் நொச்சி மிலைந்த
திருந்துவேல் விடலை காப்புஅமைத் தனனே.[1]

ஔவையாரும் அந்த நிலை குறித்துப் பாடினார். புண்பட்டுக் கிடக்கும்போது தம்முடைய உரையாடலாலும் பாடலாலும் அந்தப் புலமைப் பெருமாட்டியார் அவனுக்குச் சோர்வு வாராமல் செய்து வந்தார். படைத் தலைவர்கள் அன்றன்று இரவு வந்து போர்க்களத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் சொல்லிச் சென்றார்கள்.

“நாம் பாண்டியனுக்கும் சோழனுக்கும் உதவி வேண்டுமென்று ஓலை அனுப்பினோமே! அவர்கள் வந்து சேரவில்லையே! நான் இங்கே கிடக்கிறேன். இந்தச் சமயத்தில் அவர்கள் துணை கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்!” என்று அதிகமான் கூறினான்.

“அவர்கள் படைகளை ஆயத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். ஓலை போன பிறகே ஆவன செய்கிறார்கள் போலும்!” என்றான் ஒரு படைத் தலைவன்.

மறுநாளே பாண்டியன் படை வந்து விட்டது. அதற்கும் மறுநாள் சோழன் படையும் வந்து சேர்ந்து கொண்டது.


  1. மொய்த்த - பதிந்த. குன்று - குன்று போன்ற மார்பு; உவம ஆகுபெயர். விழுப்புண் - மார்பிலும் முகத்திலும் பட்ட புண், பையென - பசுமையாக. குரல் - பூங்கொத்து. மதிலை முற்றுகையிடுபவர் உழிஞையையும், அதனை எதிர்த்துக் கோட்டையைக் காப்பவர் நொச்சி மலர் மாலையையும் அணிவது மரபு. காப்பு அமைந்தனன் - மேலும் தீங்கு நேராமல் பாதுகாக்கும் காவலில் பொருந்தியிருக்கிறான்.