பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

53


இன்னும் மாருது சினனே ! அன்னோ!
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே ;
செறுவர் நோக்கிய கண்,தன்
சிறுவனே தோக்கியும் சிவப்புஆ னாவே. [1]

[வியர்-வேர்வை. மிடறு-கழுத்து. வட்கா-பகைவர். போகிய-அழிவதற்குக் காரணமான. போந்தை-பனை. உச்சி-மரத்தின் உச்சி. ஊசி வெண் தோடு-ஊசி போன்ற முனையையுடைய குருத்து ஓலை. விரைஇ-கலந்து. சுரி இரும் பித்தை-சுருண்ட கரிய தலை மயிர். வரிவயம்-புலி. வயக்களிறு-வலிமையுடைய ஆண் யானை. இன்னும் ஆறாது என்று பிரிக்கலாம். அன்னோ-அந்தோ; இரக்கக் குறிப்பு. உடற்றியோர்-எதிர்த்தவர்கள். செறுவர்-பகைவர்களே. சிறுவனை-மகனை. ஆனா-நீங்கவில்லை.]

மகனைக் கண்டு மகிழ்ந்த அதிகமான், திருக்கோவலூரில் தக்க படைத்தலைவரை நிறுவ ஏற்பாடு செய்தான். பிறகு மகன் பிறந்ததற்குப் பெரு விழாக் கொண்டாடினான். படை வீரர்களுக்குப் பொன்னும் பண்டமும் வீசினான். புலவர்களுக்குப் பரிசில் பல வழங்கினான், பாணரும் விறலியரும் கூத்தரும் பல வகைப் பொருள்களைப் பெற்றார்கள். அதிகமானுடைய நாடு முழுவதுமே களிக் கூத்தாடியது. திருக்கோயில்களில் சிறப்பான பூசனைகளும் விழாக்களும் நடந்தன.

பிறந்த மகனுக்குப் பொகுட்டெழினி என்ற பெயரைச் சூட்டினான் அதிகமான். அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தன் பிள்ளைப்பருவ விளையாடல்களால் பெற்றோர்களையும் மற்றோர்களையும் மகிழச்செய்தான். அதிகமான் குலம் மங்காமல் இவனால் ஒளிரும் என்று சான்றோர்கள் இன்புற்று உள்ளங்கனிய வாழ்த்தினார்கள்.