பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப்புர நிகழ்ச்சி

91


அவளுக்கு மனத் துயரம் ஆறவில்லை. தன்னை ஒரு தொழிலாளர் பெண் என்று எண்ணித் தீங்கு புரிய நினைந்த அந்தப் புல்லியனை வேலையிலிருந்து ஓட்டிவிட வேண்டுமென்று கறுவினாள். ஒவ்வொரு நாளும் அரசியை, “அவனை என்ன செய்தீர்கள் அம்மா?” என்று கேட்பாள். அரசிக்கோ இந்த நிகழ்ச்சியைப் பெரிதாக்க மனம் இல்லை; “மன்னரிடம் சொல்லியிருக்கிறேன்” என்பாள்.

“நான் ஏழையென்று நீங்கள் எண்ணிவிட்டீர்கள். அதனால்தான் எனக்கு வந்த இன்னலைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நீங்களே இப்படி நினைக்கும்போது அந்தப் பாவி என்னைக் கிள்ளுக்கீரையாக நினைத்தது வியப்பே அன்று” என்று ஒரு நாள் அவள் சற்றுக் கோபமாகவே பேசினாள்.

“அழகான பெண் என்றால் கண் உடையவர்கள் பார்க்காமல் இருப்பார்களா?” என்று அரசி விளையாட்டாகச் சொன்னாள்.

அந்தச் சொல் காதில் விழுந்ததோ இல்லையோ, அந்த இளம் பெண் புலிபோலச் சீறினாள். “என்ன அம்மா சொல்கிறீர்கள்? அவன் உங்களுக்குத் தம்பி என்று சொன்னது உண்மையாகவே இருக்கும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. நான் ஏழையாக இருக்கலாம். நீங்கள் அரசியாக இருக்கலாம். ஆனால் உங்களுக்குள்ள மானம் எங்களுக்கும் உண்டு அம்மா. கற்பைக் காத்துக்கொள்வதில் எங்களுக்குள்ள வீரம் உங்களுக்குக்கூட வராது” என்று படபடவென்று கொட்டிவிட்டாள்.

அரசி நடுங்கிப் போனாள். ஏன் இப்படிப் பேசினோம்? என்று இரங்கினாள். “நான் இன்று எப்படியாவது அரசரிடம் சொல்லி ஏதாவது வழி பண்ணுகிறேன். நீயும் இங்கே இரு உன் காதில் கேட்கும்