பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படத் தயாரிப்பாளர் இனிமேல் புறப்பட்டுத்தான் ஆக வேண்டும்!-அவருக்குப் பணப் பிரச்னை தீர்ந்தது; படம் ‘ரிலிஸ்' ஆகிவிடும். இங்கே பசிப் பிரச்சினை இனியாகிலும் தீர்வு காண வேண்டாமா?

"பாங்கர் ஸார், உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க.”

“செக் பத்திரம், கைலாசம்!”

"உங்க பணத்தை எப்படிப் பத்திரமாகக் காபந்து பண்ணிக்கிடுவேனோ, அதே மாதிரி, என் நாணயத்தையும் காபந்து பண்ணிக் காப்பாற்றிக்கிடுவேனுங்க, ஐயா!’

“சரி, புறப்படுங்க!”

கைலாசம் ஏனே தயங்கினார்; கன்னங் கறுத்த கண்களை நிமிர்த்தி, தூண் மறைவில் நின்றிருந்த ரஞ்சனியின் திசைக்குத் திசைமாற்றி விட்டார். பிறகு, பாங்கரைப் பார்வை யிட்டார். "ரஞ்சித் ஸார், அண்ணியை ஒரு நிமிஷம் இப்படி வரச் சொல்ங்களா?” என்று வேண்டினர்.

எடுக்கப்பட்டுவிட்ட முள்ளின் முனை எப்படியோ தங்கியிருந்து குத்துவது போல வேதனைப் படலானார் ரஞ்சித். நெஞ்சப் பிசைந்து கொண்டார்: முதுகைத் திருப்பி 'ரஞ்’ என்று விளித்தார்.

தயங்கித் தயங்கி வந்து நின்றாள் ரஞ்சனி,

நிமிர்ந்தார் கைலாசம், "பெண்ணாகப் பிறக்கிறத்துக்குத் தவம் செய்யவேணும்னு படிச்சிருக்கேன். அது. உங்கவரை, நூற்றுக்கு நூறு அர்த்தமுள்ள வாக்குத்தானுங்க. உண்மை யான, நம்பிக்கையான, நாணயமான, விசுவாசமான உங்களை மனைவியாக அடைஞ்சிருக்கிற எங்க அண்ணன் ரொம்ப ரொம்புப் பாக்கியவானுங்க, அண்ணி!உங்களை நமஸ்காரம் பண்றேனாங்க! என்று உணர்ச்சிப்

63