பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


டிரைபசின் மனைவி மகிழ்ச்சியால் முகமலர்ந்தாள்.

ஜோலா கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்தார். அறையில் அமைதி நிலவியது. டிரைபசின் சகோதரரின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது

"அநீதிக்கு வழிவிட்டு நாம் அமைதியாக வாழ முடியாது. டிரைபஸ்மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன, அவன் நன்றாகப் படித்தவன்-- குற்றம்--சலியாக உழைப்பாளி--குற்றம். உண்மையான சாட்சியங்கள் அவனுக்காதரவாய்க் கிடைக்கவில்லை, குற்றம். அவன் ஒரு யூதன்--குற்றம்-- அவன் கலங்காதவன்--குற்றம். அவன் கலக்கமடைந்தான்--குற்றம்"

துடிதுடிக்கின்ற விரல்களால் மற்றொரு பக்கத்தைப் புரட்டினார், குரல் இன்னும கனத்தது.

"யுத்த மந்திரி, இராணுவக் குழுவினர் படைத் தலைமை எஸ்டர் ஹேஸியைச் சந்தேகிக்க மனமொப்பவில்லை. ஓராண்டிற்கு முன்பிருந்தே அவர்களெல்லோருக்கும் நன்றாகத்தெரியும் டிரைபஸ் குற்றமற்றவன் என்று. குற்றமற்றவன் தீவில் வாழும்பொழுது, அநீதி வழங்கியவர்கள் அமைதியாக வாழுகிறார்கள், மனைவி மக்களிடம் அன்பு பாராட்டி மனிதாபிமானமுள்ளவர்களாக."

நீர்த்துளி படர்ந்த கண்ணாடியைத் துடைத்துகொண்டு ஜோலா மேலும் படிக்கலானார்.

"இராணுவக் குழுவினர் எஸ்டர்ஹேசை விசாரித்தனர். ஏன்? டிரைபஸை மற்றுமொருமுறை தண்டிக்க இது உண்மை, ஆனால் பயங்கரமான உண்மை. நான் உறுதியுடன் கூறுகிறேன்--"உண்மை கிளம்பி விட்டது. எதுவும் இதைத் தடைசெய்ய முடியாது."