பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினாறு

ள்ளிருளில் மண்ணாங்கட்டி, தோப்பில் கட்டப் பட்டிருக்கும் குறவனைச் சுற்றிச் சுற்றி வருகிறான். குறவனைச் கட்டியவர்கள் உறங்குமிடத்தை நெருங்குகிறான். அவர்கள் நிலையை உற்றுப் பார்க்கிறான். விரைந்து வந்து கட்டப்பட்டிருக்கும் குறவனை அவிழ்க்கிறான். குறவன் விரைவாக ஓடி மறைகிறான். உறங்கியவர்கள் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். மாமரத்தை விரைவில் அடைகிறார்கள். மண்ணாங்கட்டியைப் பிடிக்கிறார்கள், கட்டி விடுகிறார்கள். மண்ணாங்கட்டி தாக்கப்படுகிறான்.

இரண்டு தடிகள் மாறிமாறி மண்ணாங்கட்டி மேல் பாய்கின்றன. அடிகள் நின்றபோதெல்லாம் அவன் விழிகள் ஏழைமக்களின் வீட்டை நோக்குகின்றன. அடிபடும் போதெல்லாம் அவனால் தலைதூக்க முடியா விடினும் அவன் நெஞ்சம் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஏழைமக்களின் நிலை என்ன என்று பார்க்கிறது. அடித்தவர்கள் சற்றுத் தொலைவில் சென்று உட்காருகிறார்கள். இருள் நிறம் கட்டுக் குலைகிறது. கருநிற வானில் வெண்ணிறம் மிதக்கத் தொடங்குகிறது. சங்கிலியால் பிணிக்கப்பட்டுத் தத்தம் குடிசைக்கு நேரில் நிற்கும் ஏழைமக்களின் விழிகள் கோழியை மூடி வைத்துள்ள கூடையைப் பார்க்கின்றன. மீண்டும் அவ்விழிகள் தம் கைகள் விலங்கிடப் பட்டிருப்பதைப் பார்த்து நீர் சொரிகின்றன.

30