பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 அம்பிகாபதி காதல் காப்பியம்


155 மாமனர் வீட்டில் மண்டி யிட்டே
ஏமம் பெறுாஉம் ஏழைக் கணவரைக்
காமம் செய்யாது கண்டபடி நடாத்தும்
வாமப் பெண்டிரின் வகைக்கோர் அளவிலை
இவையெலாம் அறிவையோ என்ன, அம்பி,
 
160 இவையெலாம் என்னிடம் இயம்பும் நோக்கினை
நவையிலா தின்னே நவிலுதிர் என்ன,
வேந்தன் மகளை விரும்பல் அவன்குடி
மாந்தன் தனக்கு மாண்புடைத் தாகுமோ?
மன்னர் குடியில் மகளைக் கொடுத்தலே

165 மன்னர்க் குரிய மரபாம் அறிமதி!
சோழன் மகளைச் சுற்றிக்கொண் டிருத்தல்
ஏழ்மைப் புலவற் கேலாச் செயலாம்;
அமரா வதியைநீ அவாவித் திரிதல்
நமரால் ஒப்பத் தக்கதோ நவிலுதி!

170 ஏணி வைப்பினும் எட்டாத் தொலைவில்
மாணிழை யுள்ளாள்; மற்றும், உன்செயல்
மொட்டைத் தலையையும் முழங்கால் தனையும்
கட்டி முடிப்பதைக் கடுக்கும் செயலாம்.
உவச்சர் குலத்தில் தோன்றிய உனக்கிது

175 அவச்சொல் லாகும் அகன்றிடு அவளை.
பொருந்தாக் காதல் புரிவது மடமை
திருந்தி யுளத்தைத் திருப்புக மறுபால்.
அரண்மனை வாழும் அவளை நீ மணக்கின்
அரண்மனை ஏவல் ஆளாய் விடுவாய்

180 முரண்மிக நேரும் முற்றும் உணர்மதி
என்றுநல் லறிவுரை இயம்பக் கேட்டபின்,


156. ஏமம் - பாதுகாப்பு. 157. காமம் விருப்பம். 158. வாமம் - தீய குணம். 161. நவை - தவறு; இன்னே - இப்போதே. 162-163. குடிமாந்தன் - குடிமகன். 168. அவாவி - விரும்பி. 169. நமர் - நம்மவர். 171. மாணிழை - அமராவதி. 173. கடுக்கும் - ஒக்கும். 175. அவச்சொல் - பழிச்சொல். 180. முரண் - மாறுபாடு.