பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை 237


கறுவச் செய்தது காவலன் உளத்தை.
ஆங்கு நின் றகன்றவன் அப்பாற் சென்றனன்.
ஆங்கொரு வீட்டில் அகமுடை யானைப்
பாங்குறு மனைவி பண்பொடு வினவுவாள்:

(மனைவி வினவல்)

75 நந்தம் மகட்கு நாயகன் பார்த்து
வந்தனை; மணமகன் வளமெப் படியென,

(கணவன் கூறல்)

மகளுக் கேற்ற மணாளன் அவனே.
அம்பிகா பதியும் அமரா வதியும்
போன்ற இணைப்புப் பொருத்தம் உளதென,

(மன்னன் செயல்)

80 நகர மறுகில் நடப்பன வெல்லாம்
நிகரில் வேந்தன் நின்றுநின் றறிந்தபின்,
ஊரெலாம் பேரலர் பரவி யுள்ளது
பாரெலாம் என் புகழ் பாழாய்ப் போனது
ஆவது சூழ்ந்தியான் அம்பிகா பதியைச்

85 சாவச் செய்வதே சால நன்றென
எண்ணி மன்னன் இரும்பேரரண்மனை
நண்ணி அமளியில் நைந்து சாய்ந்து,
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்" என் பது குறள்;

90 என்னுயிர் ஏனினும் ஏகவில் லையெனத்
தன்னுடல் உறுப்பெலாம் தாழ்வாய் நோக்கினனே.


71. கறுவ - சினக்க; காவலன் - மன்னன். 73. அகமுடையான் - கணவன். 74. பாங்கு -நல்லியல்பு. 75.நாயகன் - கணவன் (மாப்பிள்ளை). 77. மணாளன் - கணவன் (மாப்பிள்ளை) 80. மறுகு - தெரு. 81.நிகரில் - ஒப்பில்லாத. 82 பேரவர்- பெரும் பழிச் சொல். 85.சால -மிகவும். 87. அமளி - படுக்கை. 88. கவரிமா - கவரிமா என்னும் ஒருவகை விலங்கு. 30. எனினும் - ஏன் இனும் - ஏன் இன்னும் (இடைக் குறை).