பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 அம்பிகாபதி காதல் காப்பியம்


புதுமை யிருந்ததாய்ப் புலப்பட்ட தவர்க்கே.
விருந்து முடிந்தபின் வெற்றிலைத் தாம்பூலம்
அருந்த அனைவர்க்கும் அளிக்கப் பெற்றபின்,
ஆடை அணிகலன் அரும்பொருள் பலவும்

165 நாடறி புலவோர்க்கு நல்கப் பட்டன.
கம்பரும் அம்பியும் தவிர, மற்றவர்
இம்பர் நீங்க விடையும் ஈந்தே
அமைச்சோ டிருந்த அரசன் கடாவுவான்:
கம்பரே! உம்மகன் கவிபாடுங் காலை

170 வம்பாய் மறித்துநீர் வழிதிருப் பியதேன்?
இதிலொரு மறைபொருள் இருப்ப துணர்கிறேன்
பதிலிதற் கென்ன பகருவீர் என்ன,
கம்பர் மாழ்கிக் கழற லானார்:
அவனும் யானும் இணைந்தே அமைத்த

175 நவையில் ஒருபா நானில மதனில்
இலங்கிட வேண்டுமென் றெண்ணினே னதனால்
நலங்கிளர் பாடலை நானே முடித்தேன்
என்று கூறிட, இசையான் வேந்தன்;
காம வெறியன் கள்ளச் செயலன்

180 அம்பி காபதி அமரா வதியைக்
கருதியே அந்தக் கவிபாட லானான்;
குருதிப் பற்றால் குறுக்கிட்டு நீவிர்
அதனை மறைக்க அவனைத் தொடர்ந்தீர்
என்று கூறி, இப்பால் அம்பியைக்

185 கன்றி நோக்கிக் காய லானான்:
அம்பிகா பதிநீ அமரா வதியைக்
குறித்தே சொற்களைக் கொட்டினா யன்றோ



167. இம்பர் - இவ்விடத்திலிருந்து. 168. கடாவுவான் - வினவுவான் 173. மாழ்கி - மயங்கி. 175.நவை - குற்றம். 176. இலங்கிட - விளங்கிட. 177. நலம் கிளர் - நலம் மிகுந்த. 178. இசையான்-ஒத்துக் கொள்ளான். 182. குருதிப் பற்று - இரத்த பாசம்.185. கன்றி-இலந்து ; காய்தல் - சுடுசொல் கூறல்.