பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

அம்பிகாபதி காதல் காப்பியம்

குறையினை எண்ணியும் கூறுவான் அகத்துள்:
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”என் பதுகுறள்;

25 “யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்பது புறநானூற் றிரும்பெருங் கருத்திதை
மன்பதை யுணரின் மாசே யிராது.
யானை கொழுத்தால் யாங்குள மண்ணையும்

30 தானே வாரித் தலையில் போட்டிடும்!
யானே காரணம் எனது நிலைக்கே.
‘குறிக்குத் தகுந்த இராமசரம்’ என்பர்;
முறைக்கு மீறி முயலல் தக்கதோ?
மன்னன் மகளை மணக்க விரும்பியது

35 என்னுடைக் குற்றமே இதிலையம் இல்லை.
எந்தை எனக்கெடுத் தியம்பினர் அறிவுரை
சிந்தையில் அதனைச் சிறிதும் கொண்டிலேன்;
குதிரையைத் திருடிக் கொண்டு போனபின்
கொட்டகை பூட்டும் கொள்கையரானேன்.

40 பட்டாலே தெரியும் பகுத்துண ரார்க்கே.
உலக மாந்தர்க் குரைப்பேன் ஒன்று:
கலகம் விளைக்கும் காதல் வேண்டா.
மேனி யழகின் மினுக்கால் அழிந்து
போனவர் அளவைப் புகல வொண் ணாது.

45 கொள்ளுங் காதல் கொள்ளுமா வெற்றியென
உள்ளிப் பார்க்க வேண்டும் உணர்ந்தே.
காதல் கொள்ளினும் கடிமணம் புரியுமுன்
தீதுடல் உறவு கொள்ளுதல் தெரிவீர்.
உடலுறவு கொண்டபின் உறவினர் மணத்தைத்


24. கருமம் - செயல்; கட்டளைக் கல் - உரை கல். 28. மன்பதை - மனித சமுதாயம்; மாசு - குற்றம். 32. குறி - இலக்கு. 46. உள்ளி - எண்ணி. 47. கடி மணம் - திருமணம். 48. உடல் உறவு - புணர்ச்சி.