பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 அம்பிகாபதி காதல் காப்பியம்


அரண்மனை விட்டே அகலலாம் என்றே
திறன்மிகத் தீட்டிய திட்டப் படியே

290 அரண்மனை நீத்தே அகல லானாள்:
காப்பறை யினின்று கடிநகர் வெளியே
காப்பொடு செல்லக் கள்ளச் சுருங்கை
வழியொன் றுள்ளதவ் வழியாய் விளக்கு
வழிகாட்டச் சென்றவ் வழியைக் கடந்து

295 வெளியே போந்து விளக்கொடு நிலவின்
துணைகொடு,அம்பியின் அடக்கம் துன்னியம்
மனையில் நாட்டிய மறக்கல் மீதே
அம்பிகா பதிபெயர் பொறித்துள அடையாளம்
நம்பச் செய்யவந் நடுகலைத் தழுவி

300 வெம்பி வெதும்பி விம்மிப் புலம்புவாள்:
(1) "அம்பிகாபதி கோவையீந்த அண்ணலே அமுதே
அந்தமிழை வளர்த்திட்ட அறிஞ ரேறே!
கம்பரென்ன படுவாரோ கலங்கு வாரோ
கனிவுடைய நுந்தாயார் கதறு வாரோ!
உம்பருல கடைந்திட்ட உயர்ந்த தேவே
உமைப்பிரிந்தும் உண்டுகளித் துயிர்வாழ் வேனோ!
நம்பியுமைக் கொன்றகுற்றம் நானே ஏற்பேன்
நமனாய்வந் துமைமுடித்தேன் நானுய் வேனோ?"


290. நீத்து - துறந்து, பிரிந்து. 292. காப்பொடு - பாதுகாப்போடு. சுருங்கை வழி - சுரங்க வழி. 216. துணை கொடு-துணைக் கொண்டு; அடக்கம் - சமாதி; துன்னி - அடைந்து; துன்னியம் - துன்னிஅம் - துன்னி அந்த மனை - சமாதியுள்ள நிலப்பகுதி; மறக்கல் - இறந்தவரின் அடக்கத்தின்மேல் நடும் வீர நடுதல். 298. நடு கல்லில், இறந்தவரின் பெயரைப் பொறித்து வைப்பது மரபு. 301. அம்பிகாபதி கோவை - அம்பிகாபதி இயற்றிய ஓர் ஆகப்பொருள் நூல். 304. நம்பி - ஆண்மக்களுட் சிறந்தவன்; நமன் - எமன்.