பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர் காட்சிக் காதை

காதலர்ப் பிரிந்தோர் கவன்று வாட
மேதகு பொலிவுடன் மிளிர்ந்தது விண்ணில்.
வெண்ணிலா வீசுமவ் வேளை தன்னில்
நண்ணினான் அவ்வழி நடந்து மெல்ல
50 கம்பர் மகனாம் கல்வியில் வல்லனாம்
அம்பிகா பதியெனும் ஆண்மைத் தோன்றல்.

(அம்பிகாபதியின் தோற்றம்)

கொய்து சுருண்ட குஞ்சியன் தலையில்,
செய்துவைத் தாலெனத் திரள்வரைத் தோளினன்,
அடுபடை தாங்கும் அகன்ற மார்பன்,
55 தொடுமுழங் கால்வரை தொங்குங் கையினன்,
காந்தையர்க் கவரும் கனிந்த கண்ணினன்,
ஏந்தெழில் மிக்க இளைஞன் இசைவலன்,
நயனுடை இன்சொலன், நல்லதன் பெயரால்
பயனுடை அம்பிகா பதிகோவை' என்னும்
60 வியனுறு நூல் தந்து விளங்கும் புலவன்,
ஓதல் வல்ல உயரியோன் எனினும்
காதல் கலைஞன் கட்டிளங் காளை

(காதலர் காணல்)

மேன்மா டத்தில் மேனி மினுக்கித்
தேன்மொழி நின்றதைத் தெரியக் கண்டனன்;
65 புருவ வில்லின் புறப்படு கண்கணை
உருவ உளத்தை உரைதொடுத் தனனே;
குலவும் தாரகைக் குழுவிடை மின்னும்


46. கவன்று கவலைப்பட்டு. 47. மிளிர்ந்தது - விளங்கியது. 51. தோன் றல் - ஆண்களுள் சிறந்தோன். 53. குஞ்சி - தலைமயிர். 53. வரை - மலை. 56. காந்தையர் - பெண்கள். 57. எழில் - அழகு. 60 - வியன் - மேன்மை. 63. மேனி - உடம்பு. 64. தேன்மொழி - அமராவதி. 65. கணை - அம்பு.