பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை

55

25 அழைப்பு விடுத்த அவளே முதன்முதல்
குழைப்பொடு தழுவிக் கொஞ்ச வேண்டுமால்;
இல்லை யில்லை ஏந்திழை முந்துதல்
நல்ல தன்று நானே முதலாள்
என்றெலாம் என்னவோ எண்ணிக் குழறுவான்:

30 ஞாயிறு நந்துபோல் மெல்ல நகர்வதோ!
தீயரும் இன்னணம் தீமைசெய் யாரே!
நண்பகல் நமற்கு நான்செய் கெடுதியென்?
வன்பக லாக வளருமால் நெடிதே;
மாலை செய்யும் மாலை வந்தும்

35 காலை ஏய்ப்பக் கால்கொண் டுள்ளதே!
அப்பா இருளும் அடைந்ததிப் போதுதான்!
எப்போது நள்ளிருள் எய்துமோ அறியேன்;
ஓகோ ஊரொலி ஒடுங்கி விட்டதே
ஆகா நள்ளிரா ஆமாம் இஃதென

40 இன்ன பிதற்றியோன் இரும்பேரரண்மனைக்
கன்னி மாடக் காவினை நோக்கி
நெடிய நகர்முழு துறங்கும் நேரம்
கடிது பறந்தனன் கால்களாம் சிறகால்.
ஊர்க்கா வலர்குழல் ஊதொலி யொருசார்

45 கூர்ப்பல் நாய்கள் குரைப்பொலி யொருசார்;
இன்ன வன்றி எங்கணும் அமைதி
துன்னக் கன்னி மாடத் தோட்டம்
அடைந்தனன் ஒருவரும் அறியா வண்ணம்
நடந்தனன் மெல்ல நறுமலர்க் காவினுள்.

50 புதியவ னாதலின் பொதும்பர்க் குள்ளே
எதுவழி எங்கே யாரைக் காண்பது
என்ப தறியாது ஏந்தல் திகைத்தான்.

29. குழறுவான் - குழம்பிக் குளறுவான். 30. நந்து - நத்தை 32. நமன் - எமன். 34. மாலை - மயக்கத்தை; மாலை - மாலைநேரம். 35. ஏய்ப்ப - போல; கால் கொள்ளுதல் - அழுந்த நிலைத்தல். 41. கா - சோலை. 47. துன்ன - பொருந்த. 50. பொதும்பர் - சோலை. 52. எந்தல் - அம்பிகாபதி.