பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 591


சீதை புலம்பல்

நிறை தவச்சுக்கு குறை யிவளென்று நினைத்து கைவிடுவாரோ
பறையர் வூரிலே சிறையிலிருந்த வென்னை பரிந்துகை தொடுவாரோ

என்னுஞ் செய்யுளாதாரத்தால் பௌத்தர்களைப் பறையர்கள் என்று கூறியுள்ளாரென அறியலாம்.

- 2:51: சூன் 2, 1909 -


14. ஆரியன் என்னும் ஓர் மனிதன் இருந்ததுங் கிடையாது
அவன் மறைந்ததுங் கிடையாது

ஆரியமென்னும் ஓர்பாஷை இருந்ததுங் கிடையாது, அதன் அட்சரமுங் கிடையாது, அவற்றால் வரைந்துள்ள நூற்களுங் கிடையாது. ஆரியமென்னும் ஓர் மதமுங் கிடையாது, அதன் ஆக்கியோனுங் கிடையாது, அதன்தருமம் இன்னது இனிய தென்பதுங் கிடையாது.

ஆரியமென்னும் பெயர் எத்தகையாய் தோன்றியதென்பீரேல்,

1,500 வருடங்களுக்குப் பின் இந்திரர்தேசமாகும் இந்திய தேசத்துள் மிலேச்ச அல்லது நீசச்செய்கெயுள்ள ஓர் கூட்டத்தார் வந்துசேர்ந்து கொல்லா விரதமுள்ள தேசத்தில் பசுமாடுகளையும், குதிரைகளையுஞ் சுட்டுத்தன்று சுறாபானமென்னும் மயக்கவஸ்துவைக் குடிப்பதை அறிந்த மேன்மக்களாம் பௌத்தர்கள் இவர்களை ஆரியர்களென்றும், மிலேச்சர்களென்றுங் கூறியுள்ளதை, பௌத்தர்கள் முன்கலை நூலாகும் திவாகரத்திலும், பின்கலை நூலாகும் நிகண்டிலும், பெளத்தவரச சீவகன் சரித்திரமாகும் சீவகசிந்தாமணியிலும், மணிவண்ணன் என்னுங் கிரீடினன் சரித்திரமாகும் சூளாமணியிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

நிகண்டு - திவாகரம்

மிலேச்சாரியார்

மிலேச்சராமாரியர்ப் பேர் மிலைச்சரென்றுரைக்கலாமே.

சீவகசிந்தாமணி

செங்கட்புன் மயிர்த்தோல் திரைச்செம்முக / வெங்கணோக்கிற் குப்பாய மிலேச்சனை செங்கட்டீவிழியாற் றெரித்தான்கையு / ளங்கட்போது பிசைந்திடு கூற்றனான்.

சூளாமணி

தேசமிலேச்சரிற் சேர்வுடையாரவர் / மாசின் மனிதர் வடிவினராயினுங்
கூசின் மனத்தச் கொடுந்தொழில் வாழ்க்கையர் / நீசரவரையு நீரினிழிப்பாம்.

மத்திய ஆசியாகண்ட முழுவதும் ஆதியாகவிருந்தது மகடபாஷை என்னும் பாலிபாஷை ஒன்றேயாம். அதன்பின் சாக்கையச் சக்கிரவர்த்தித் திருமகனாகும் புத்தபிரானால் இயற்றியது சகடபாஷை என்னும் சமஸ்கிருதமும், திராவிடபாஷை என்னும் தமிழுமாகும்.

இத்தமிழ் பாஷையை புத்தபிரான் வடநாட்டில் இயற்றிய ஆதாரங் கொண்டு மகதநாட்டருகே தமிழுக்கென்னும் நாடு நாளதுவரையிலுள்ளதுமன்றி மகதநாட்டுள் தமிழர்ச் சேரியென்று வழங்கிவந்ததையும் உதயணன்காதையிற் காணலாம்.

மகடபாஷையாம் பாலியினின்றே பதிநெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது.

முன்கலை திவாகரம்

மகதங், கோசல, மராட்ங், கொங்கணஞ், சிந்து, சோனகந், திராவிட, சிங்களம், அங்கம், வங்கங், கலிங்கம், கெளசிகந் துளுவஞ், சரவகஞ், சிநங், கம்போஜ, மருணம், பப்பிர, பதிநெண்பாடையாம். இவற்றுள் ஆரியமென்னும் பாஷையேனும் சப்தமேனுந் தோன்றியது கிடையாது.

பாலிபாஷையாம் மகடத்தினிற்றே சகலபாஷைகள் தோன்றிய ஆதாரத்தால் திராவிட பாஷையாந் தமிழ் மொழிகள் பலபாஷைகளிலுங் கலப்புற்றிருக்கின்றது.

அவலோகிதராம் புத்தபிரானால் இயற்றி அகஸ்தியர் வசமளித்து தென்னாடெங்கும் மிக்க பரவியபடியால் தமிழை தென் மொழியென்றும்,

சாவகஞ் சகடமென வழங்கும் சமஸ்கிருத பாஷை வடநாட்டில் வழங்கிவந்தபடியால் வடமொழியென்றும் வழங்கலாயினர்.