பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


39. பிரேதம் எடுத்துச் செல்லுகையில்

வினா : அதாவது, ஓர் பிரேதம் எடுத்து செல்லுகையில் பாடையின் கீழ் சிறு மூட்டை எள்ளை கட்டிக்கொண்டும், ஓர் கோழிக்குஞ்சும் கட்டியிருப்பதை பார்த்து அக்கூட்டத்தாரை விசாரிக்கையில் இப்பிரேதம் இரவில் ரூபமாய் வரும். அதை தடுப்பதற்கிவ்விதம் செய்வது வழக்கமென்றார்கள். உயிற்றுறந்த பிரேதமும் இரவில் பேயாய் வரும் என்றது சந்தேகமாயிருப்பதால் தாங்கள் தயையுடனிதின் விஷயத்தை தெரிவிக்கும்படி வெகுவாய் கேட்டுக் கொள்ளுகின்றனன்.

பி.டி. முநிசாமி,. பெங்களூர்.

விடை : அன்பரே, தாம் வினாவிய எள்ளுமூட்டை வினா தள்ளு மூட்டைகளிலொன்றேயாகும். அதாவது நமது தேசத்தோர் இல்லாதப் பொய்க்கட்டுக்கதைகளும் இணையாத ஆசாரங்களும் ஒவ்வொன்றை ஏற்படுத்திக்கொண்டு அதனதற்கென்று ஒவ்வோர் சாந்தி வகுத்து விருதா செயலை வீணே வளர்த்து மனோ சங்கற்பத்தால் மடிவதியல்பாம். அதே பார்ப்பான் கிறீஸ்துமதத்திற் சேர்ந்து குடிமியைத் தரித்து பூனூலையுமெரிந்து குல்லாவும் பூட்சு மணைந்து எதிரில் வருவானாயின் யாதொரு சாஸ்திரமும் பார்க்காமல் குட் மார்னிங் சார் போட்டுக்கொண்டே யாதொரு சங்கையுமின்றி போய்விடுவார்கள்.

மற்றொரு பார்ப்பான் மகமது மார்க்கஞ்சேர்ந்து குடிமியையும், பூனூலையும் எடுத்துவிட்டு தாடி வளர்த்துக்கொள்ளுவானாயின் அவனை எதிரிற் காண்போர் ஒத்தை பார்ப்பான் சாஸ்திரம், இரட்டை பார்ப்பான் சாஸ்திரங்களை வொதிக்கிவிட்டு சந்தோஷமாக எதிரிற் சென்று சாப் சலாம் சாயப் போட்டுக்கொண்டே போய்விடுவார்கள்.

இதனது விகற்பத்தால் பார்ப்பானென்னும் வேஷத்தை ஏற்றுக்கொள்ளு வோரும் நமது தேசத்தார். அதிலொருவனை எதிரிற் காண்பாராயின் தூற்றிக் கொள்ளுவோரும் நமது தேசத்தோரேயாவர். ஈதன்றி ஓர் பெண்ணை விவாகஞ் செய்தவுடன் அவள் கழுத்தில் மஞ்சள் சரடிட்டு முகத்தில் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு அவளை விவாக இஸ்திரீ மங்கல்ய ஸ்திரீயென்று வழங்குவது வழக்கம். அவள் புருஷன் இறந்தவுடன் கழுத்திலுள்ள மஞ்சள் சரடை எடுத்துவிட்டு மஞ்சள் பூசக்கூடாதென்றும், பொட்டிடக்கூடாதென் றும், நல்ல வஸ்திரம் கட்டக்கூடாதென்றும் விகாரரூபப்படுத்திவிட்டு அவளைக் கைம்பெண், அறுத்துவிட்டவளென்னும் அடையாளஞ்சுட்டி அவள் எதிரில் வந்துவிடுவாளாயின் கைம்மனாட்டி எதிரில் வந்துவிட்டாள் கட்டுங் காரியமெல் லாங் கெட்டுப்போச்சுதென்று மனோசங்கற்பத்தை வளர்த்துக் கொள்ளுவார்கள்.

அதே பெண்ணானவள் ஓர் மகமதியனையேனும், ஓர் கிறிஸ்தவனை யேனும் விவாகஞ்செய்து புருஷன் இறந்துவிடுவானாயின் அவள் கைம்பெண் வேஷமின்றி எதிரில் வரக்காணுவோர் சலாம் அம்மா, பூவியம்மா சலாம் அம்மா வாத்தியாரம்மா என்று சொல்லிக்கொண்டே சகுனம் பாராது சுபகாரியத்திற்குப் போய்விடுவார்கள்.

இவற்றுள் மங்கல்ய ஸ்திரீயென்று அடையாளம் உண்டு செய்துக் கொள்ளுவோரும் நமது தேசத்தோரே. அமங்கிலி என்னும் அடையாளம் உண்டு செய்துக்கொள்ளுவோரும் நமது தேசத்தோரேயாவர். இவர்களுள் சுமங்கிலியை காணில் சித்தியென்றும், அமங்கிலியை காணில் அசித்தி யென்றும் சாஸ்திரம் வகுத்துக்கொள்ளுவோரும் நமது தேசத்தோர் களேயாகும். மதக்கடை பரப்பி சீவிக்கும் பொய்க்குருக்கள் ஒவ்வோர் தந்திரங்களை செய்து சீவிப்பது போல் தொட்டில் பழக்கம், சுடுகாட்டு மட்டு மென்னும் பழமொழிக்கிணங்க பொய்க்குருக்களின் போதனை வெட்டியார் களுக்கும் வழிகாட்டி (சிக்கின்பிராத்திற்கு) வழிதேடிவிடுகின்றது.

அவனவன் செய்யுந் தீவினைகளை அனந்த பிரவியால் அவனவனனு பவிக்கவேண்டியதிருக்க எள்ளுமூட்டையாலும், கோழிக்குஞ்சியினாலும் தீவினைத் தொலையுமென்பது பிசகு.