பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /49

மநுஷி என்று ரூபிப்பதற்கு ஏதுவின்றி உபமானமாகவும், உபமேயமாகவும் முறைத்துள்ளக் கதைகளைக்கொண்டு மக்களுக்கு ஞானமுணர்த்துவான் வேண்டி ஆதிமனிதன் ஆதி மநுஷியென வரைந்திருக்கின்றார்கள். அவற்றுள் லாமா என்னு மோசே என்பவர் தான் கண்டடைந்த உண்மெய்ப்பொருளை உலகோருங் கண்டு நித்தியமடைவதற்காக சகல மநுமக்களுக்குள்ளும் மெய்ப்பொருள் உண்டென்பதை விளக்குமாறு களிமண்ணினால் மனிதனை உருபிடித்து தன் சீவசுவாசத்தை யூதி ஓர் சிரேஷ்ட பெரியோன் உயிர்ப்பித்தாரென்றும் ஸ்திரீயும் புருடனும் அன்பிலி சைந்து வாழ்க்கைப் பெறுதற்கு அவன் விலாவெலும்பினால் துணைவியை உண்டு செய்தாரென்றும், ஆதி மனிதன் ஆதாம், ஆதிமநுஷி ஏவாளென்னும் இரு உருவங்களை வகுத்து அவ்வுருவங்களில் புருஷ உருவம், இஸ்திரீயினது இன்பத்தில் ஆழ்ந்து மாளாது நித்தியசீவனை அடைவதற்காக இஸ்திரீயின் மத்திய பாகத்தில் நன்மெயாம் புத்திர விருத்தியும், தின்மெயாம் மரணமு முண்டாதலின் நன்மெயுந் தின்மெயுமுண்டாங் கனியாகும் இன்பத்தை சதா இச்சித்து மாளாதிருப்பதற்காய கனிபோன்ற சிலேடை மொழிகளை வரைந்தும் அவற்றை சதா இன்பமுறச் செய்தது சர்ப்பத்திற்கு நிகராய வல்குலாதலின் அவ்வல்குலையே சர்ப்பம் வஞ்சித்ததென்றுக் கூறி மக்களை சீர்திருத்தி யிருக்கின்றார். லாமாவாகிய மோசேயின் பேரானந்த ஞானக் கருத்தை உணர்ந்தோரிவற்றை அங்கீகரிப்பர். அவரது சிலேடை மொழிகளையும் அதனந்தராரத்தங்களையும் உணராதோர்க்கிவை விளங்கவே விளங்காவாம். வி. டாம் என்னும் அன்பர் மற்று மவற்றைத் தெளிவுற தெளிந்துக்கொள்ள விரும்புவீராயின் நேரிற் கண்டு உசாவுவதே நிலையாகும்.

- 4-25; நவம்ப ர் 30, 1910 –
 

67. ஆகமம்

வினா : ஐயா, இவ்விடமெமதன்பரொரு செட்டியாருக்கும் எமக்கும் ஆகமத்தைப்பற்றி ஓர் வாதுண்டாயது. அஃதுயாதெனில், யாங்களிருவரும் வேதத்தைப்பற்றி பேசிவருங்கால் சிவாகமமே சிறந்ததென்று கூறினார். அந்நூல் தங்களிடம் உண்டா என்றேன் அவர் சற்று நிதானித்து சிவ புராணங்களே அகமமென்று கூறினார். என்ன கருத்தைக்கொண்ட நூலுக்கு ஆகமமென்று கூறலாமென்றேன். அக்கருத்து அவருக்கு விளங்காமலே நின்றுவிட்டார், எமக்கும் அவை விளங்கவில்லை, தாமோதமதரிய தமிழனில் புத்தாகமமென வோரிடத்தில் வரைந்துள்ளதைக் கண்டிருக்கின்றேன். ஆதலின் தாங்கள் கிருபை பாலித்து எமக்கும் எமது நேயருக்கு முற்ற சங்கையை நூலாதாரத்துடன் விளக்கி தெளிவிக்கும்படி வேண்டுகிறேன்.

பி. சந்திரசேகரன், மதுரை.

விடை : அன்பரே, தாம் வினாவியுள்ள சங்கையைத் தாங்கள் வாசித்துள்ள நூற்களிலேயே கண்டிருக்கலாம். அவற்றைத் தாம் கண்டு பிடிக்காது தெண்டபடிப்பில் விட்டது கொண்டு விசாரிணைக் கேதுவாகி விட்டது. ஓர் நூலினை கரங்களிலேந்தப்படாது. கரத்தேந்தியப்பின் அதனை ஆழ்ந்தறிய வேண்டியதே அவசியம். தாம் வாசித்துள்ள "பின் கலை நிகண்டும்" தண்டியலங்காரமு"மே மக்களுக்கறநெறியை விளக்கும் நூலை ஆகமமெனக் கூறும். அவ்வகை அறநெறியை புத்தபிரானால் போதித்ததுக்கொண்டு புத்தாகமமென வழங்கி வருகின்றார்கள். புத்தபிரானாலோதிய முதனூலுக்கே ஆகமமென்றும், ஆரிடமென்றும், பிடகமென்றும், தந்திரமென்றும், சமயமென்றும், பனுவலென்றும், சூத்திரமென்றுங் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

தந்துரைபுனைந் துரைத்தல் சார்ந்தபாயிரத்தினோடு / முந்திய பதிகமேநூன்முகமுகவுரையுமப்பே
ரந்தமா மாகமத் தோடாரிடம் பிடக மற்றுந் / தந்திரம்பனுவலோடு சமயஞ்சூத்திரமுநூற்பேர்.