பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

கொலை செய்யாமெய், பொய்சொல்லாமெய், களவு செய்யாமெய், பிரர் மனையாளை இச்சியா மெய், மதியை மயக்கும் மதுவருந்தாமெய் ஆகிய சுத்ததேகிகளாக வாழ்வோர்கள் யாவரும் மேற்சாதிகளேயாம்.
அங்ஙனமின்றி பிச்சையேற்பவர்கள் யாவரையும் பெரியசாதியோரென்றழைத்தும், பூமியை உழுது பயிர்செய்துண்பவர்களை சிறிய சாதிகளென்றழைத்தும், நியாய விரோதமாக வழங்கிவருஞ் செயலைக்கொண்டு கொலை, களவு, கட், காம முதலிய துற்செயலற்ற தண்மெயுடையோனை பிராமண னெனச் சொல்லும் பெயர் நீங்கி கொலைப்பாதகனை பிராமணன் பிராமணனென்ன வழங்கிவருகின்றார்கள்.
அதாவது பூர்வத்தில் ஒரு ஸ்திரீயானவள் இலட்சம் பொன்னுக்கு மேற்பட்ட சம்பத்துடையவளாயின் அவளையே இலட்சுமி இலட்சுமியென்று வழங்கிவருவார்கள். தற்காலமோ மலமெடுக்குங் குப்பைக்காரிகளை இலச்சி இலச்சிமியென வழங்கிவருவதுபோல் முன்னிலைச்சுட்டில் பொய்யன், கள்வன், கொலைஞனெனத் தெரிந்தும் அவனை பிராமணனெனக் கூறித் திரிவது கண்டுபடிக்கா குணமேயாம்.
கலை நூல்களைக் கண்டு படித்திருப்பார்களாயின் பிராமணனென்னும் பெயர் யாருக்குரியது, எப்பாஷையிலுள்ளது, அந்தணனென்னும் பெயர் யாருக்குரியது எப்பாஷையிலுள்ளதென ஆராய்ந்து கொலைச்செயல் நிறைந்தவன் பெயர் கொலைபாதகனென்றும், சீவகாருண்யம் நிறைந்தவன் பெயர் பிராமணனென்று உணர்ந்து தாங்கள் தெளிவடைந்து கலை நூல் போதிக்கப்பட்ட குருக்களை விசுவாசித்தும், கள்ளர் பயம், துஷ்டர்பயம், மிருக பயம், முதலியவைகளை அகற்றிக் காப்பாற்றும் அரசரை விசுவாசித்தும் சீர்பெறுவதுடன் தங்களை அடுத்தக் குடிகளையும், குருவிசுவாசம் இராஜ விசுவாசத்தில் நிலைக்கவைத்து சீர்படுத்துவார்கள்.
கலை நூல் கல்லாக் குறைவால் கொலைஞரையும், பிராமணரெனப் புகழ்ந்து அவர்களுடன் தாங்களும் இராஜதுரோகிகளென்று அழைக்கும் வழியில் திகைக்கின்றார்கள், இத்தகையத் திகைப்பிற்றெளிந்து பிராமணனென்னும் பெயர் யாருக்குரியதென்றுணர்ந்து இராஜ விசுவாசத்தில் லயித்து மானிடனென்னும் பெயரில் நிலைக்கும்படி வேண்டுகிறோம்.

- 5.7; சூலை 26, 1911 –
 

82. மார்க்கண்டேயன்

வினா : புதல்வரில்லாதோர்க்கு சுவர்க்க மில்லையென்று பிரம்ம லோகத்திலே வேதவியாச மகாமுனிவரால் சொல்லக் கேட்ட மிருகண்டேயர் மிக்க வாயாசங்கொண்டு தமக்கு மகவுகளில்லாக் குறையை முன்னிட்டு தாமும் தம்பத்தினியுமாக அரியதவஞ்செய்துக்கொண்டு வந்தமெயால் ஈஸ்வரனால் ஓர்மகவை கருப்பத்தில் தாங்கி அம்மைந்தனுக்கு 16 வயது மட்டிலும் தந்து போய்விட்டாராம். பிறகு அரிய ஓர் ஆண் குழந்தை பிறந்து மார்கண்டேய னெனப் பெயரிட்டு சீராட்டி வந்தனர்களாம். இம் மார்கண்டேயனுக்கு மழலைப்பருவங்கடந்து வாலவயதானவுடன் கயிலங்கிரி மலையிலே கபிலாய நாதனாம் ஈஸ்வரனைநோக்கி அருந்தவஞ் செய்துக் கொண்டு வருகையில் ஈசனால் அளித்த வயது கடந்ததும் இயமனால் பாசக்கயிரிட்டுப் பிடிக்க ஈசனம்மார்கண்டேயனுக்கு அளித்த வயதின் கணக்கறியாது இயமன்மீது கோபித்துதைத்துத் தள்ளிவிட்டு மார்கண் டேயனுக்கு என்றும் பதினாறு வயதளித்துவிட்டனராம். தற்போது அம்மார்கண்டேய னெங்கிருக்கின்றானோ விளங்கவில்லை . தவிரவும் அனேக பெரியோர்களும் குமரர் குமரிகளை வாழ்த்துகையில் மார்கண்டாயுசா வெனவாழ்த்துகிறபடியால் ஏதோ ஓரந்தரங்கம் மறைவுபட்டிருக்கிறதாக விளங்குகிறது. கிருபைகூர்ந்து தெளிவிக்கும்படி தங்களது திருவாக்கை எதிர்நோக்கும்.

பி.எம். ராஜரத்தினம் பிள்ளை , சாம்பியன் ரீப்ஸ்.
- 5:7; சூலை 26, 1911 –

விடை : அன்பரே, தாம் வினாவிய சங்கை காமிகா அர்ச்சனை சிறப்பேயாம். அதாவது புனனாட்டில் ஆவிடையார் கோவிலென்னும் ஓர்