பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 131


திருவடி சூட்டு படலம்

சிறுமை செய்தல்

கடலினும் பெரிய வில்படையுடன் வரும் பரதனை இலக்குமணன் நோக்கினான். பரதனது பெரும்படை, கடலைச் சிறுமை செய்து விட்டதாம். அதாவது, அந்தப் படையை நோக்கக் கடல் சிறியதாகத் தோன்றுகிறதாம்:

செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான்

(26)

என்பது பாடல் பகுதி. கடலினும் பெரிய படை என்று கூறுவதற்குப் பதிலாகக் கடலைச் சிறுமை செய்த படை என்னும் சொற்றொடர் ஆட்சி இன்பூட்டுகிறது.

ஒருமை

பரதன்மேல் சினம் கொண்ட இலக்குமணன் இராம னிடம் கூறுகிறான்:- பரதனது தோளின் பருமையையும் அவன் சேனையின் பெருமையையும் எனது ஒருமையையும் காண்- என்கிறான். அதாவது, பருத்த தோள் வலிமை உடைய பரதனையும் அவனுடைய பெரிய சேனையையும் யான் ஒருவனே வெல்வேன் என்னும் பொருளில் இலக்குமணன் முழங்குகின்றான்.

இருமையும் இகழ்ந்த அப் பரதன் ஏந்துதோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் கின்ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம்நீ

(30)

என்பது பாடல். ஈண்டு 'ஒருமை’ என்பது, தான் ஒருவனே வெல்ல முடியும்- என்னும் பொருளில் உவகை ஊட்டுகிறது.