பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இராமன்- கைகேயி ஆகியோரிடையே நடந்த உரையாடல்களிலும் வேறுபாடு உண்டு.

கோசலையிடம் இராமன், இலக்குவன் ஆகிய இருவரும் சென்றதாகவும், இராமன் காடு செல்லப் போவதைக் கோசலை முன்பே தெரிந்து அது பற்றி உரையாடியதாகவும் வான்மீகி அறிவித்துள்ளார். இராமன் மட்டும் சென்றதாகவும் இராமன் அறிவித்த பின்புதான் அவன் காடேகப் போவது கோசலைக்குத் தெரிந்ததாகவும் கம்பர் தெரிவித்துள்ளார்.

தயரதனுக்கு மூன்று பட்டத்தரசியர் இருப்பதோடு மேலும் மனைவியர் முந்நூற்றைம்பதின்மர் இருந்தனர் என வால்மீகி கூறியிருக்க, கம்பரோ, மனைவியர் அறுபதினாயிரவர் இருந்ததாகத் தாராளக் கணக்கு தந்துள்ளார்.

வனம் சென்றபோது சீதை மரஉரி தரித்ததாக வான்மீகி சொல்லவில்லை; சீதையும் மரஉரி தரித்ததாகக் கம்பர் சொல்லியுள்ளார்.

இவ்வாறு இன்னும் பல வேறுபாடுகள் கூறிக் கொண்டு போகலாம். ஒரு கதையைப் பலர் எழுதும் போது இவ்வாறு சில அல்லது பல வேறுபாடுகள் எழுவது இயற்கை.

ஆழ்கடல் முத்துகள்

அயோத்தியா காண்ட ஆழ்கடலுள் எண்ணிறந்த ஆணி முத்துகள் உள்ளன. இனி, அவற்றுள் சிலவற்றைக் கம்பர் தந்துள்ளாங்கு அறிந்து அணிந்து மகிழலாம்.