பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

விடலையாக எறிவதும் (உடைப்பதும்) நாள்தோறும் நடைபெறுவதாகும். நாட்டுப்புற வழிபாடுகளில் தென்னம்பாளை (தென்னம்பூரி) செழிப்பின் சின்னமாகத் தவறாது இடம்பெறுகிறது. உயிர்ப் பொருள்களின் விரைவான வளர்ச்சியைக் குறிக்க இன்றும் ‘கிணற்றடித் தென்னை'யைப் பேச்சு வழக்கில் உவமையாகக் கூறுவர். எனவே இதனைத் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த பயிரினம் எனலாம்.

பயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வங்கக் கடல் தீவுகளிலிருந்து கடல்வழியாகத் தென்னை தமிழ்நாட்டில் பரவி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். தென்தமிழ்நாட்டில் யாழ்ப்பாணம் தேங்காய் மிகச் சிறப்பாகப் பேசப்படுகின்றது. யாழ்ப்பாணம் தேங்காயின் மிகப்பெரிய ஓடுகளைப் பிச்சைக்காரர்கள் திருவோடாகப் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பயிர் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஒன்றுகூட இல்லை என்பதுதான் மிகுந்த வியப்புக்குரியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் எழுந்த பக்தி இலக்கியத்திலும் கோயில்களில் தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புக்களே இல்லை. ஆயினும் அக்காலத்தில் தமிழ்நாட்டில் தெங்கு நன்கு அறிமுகமாகியிருந்த பயிர்தான். முதலாம் நந்திவர்மனின் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டந்தோட்டம் செப்பேடுகளில் “இம்மனை உள்ளிட்ட தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாராகவும்” என்ற செய்தி காணப்படுகிறது. ‘தெங்கு நின்ற நந்தவனம்' என்ற தொடரையும் முதன்முதலாக இக்காலத்திலே தான் காண்கிறோம். எனவே, அக்காலத்தில் தமிழ்நாட்டின் பழைய மரமான பனை போலவே தென்னையும் ஓலைக்கும் கள்ளுக்கும் சமையல் கூட்டுக்கும் விறகுக்குமான பயிரினமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் கோயிலுக்குரிய படையல் பொருள்களில் ஒன்றாக வாழைப் பழம் பேசப்படுகிறது. ஆனால், கோயிலுக்குள் தேங்காய் படையல் பொருளாகக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.