பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஆகும். சில இடங்களில் உரலுக்கு மேலே தானியங்கள் சிதறாமல் இருக்க மூங்கிலாலோ, பிரம்பினாலோ வட்ட வடிவ மறைப்பினைச் செய்து உரலின்மீது அதற்கென வெட்டப்பட்ட காடியின்மீது வைக்கிறார்கள். அடிப்பகுதியும் மேற்பகுதியும் இல்லாத இதற்குக் ‘குந்தாணி' என்று பெயர். (காலும் தலையும் தெரியாமல் குண்டாகக் கனத்துத் தெரியும் பெண்களைக் குந்தாணி என்று கேலி செய்வதுண்டு.)

முல்லை நில வாழ்க்கையில் நெல்லும், புல்லுமான சிறிய வகைத் தானியங்களின் உறையினை நீக்குவதற்கு மனிதன் கண்டுபிடித்த கருவிதான் உரலும் உலக்கையும். பண்டைக் காலத் தொழில்நுட்பத்தின் எளிமையான வெளிப்பாடு உலக்கை.

தொடக்க காலத்தில் பாறைகளில் தானியங்களைக் குவித்து வைத்து மர உலக்கையால் குற்றியிருக்கிறார்கள். பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் மலைப்பகுதிக் கிராமங்களிலும் இப்படிப்பட்ட பாறைக் குழிகளையும் இவ்வழக்கத்தினையும்கூட இன்றும் காணமுடிகிறது.

வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டயிலே
ஆருதந்த சோமன் சேலை
ஆலவட்டம் போடுதடி

என்ற நாட்டார் பாடல் இதற்குச் சான்றாகும். நெல் வகைகளையும், புல் வகைகளையும் அரிசியாக்குவதைக் குற்றல், தீட்டல் என்ற இரண்டுவினைச் சொற்களால் குறிக்கின்றனர். குற்றிய தானியத்தை உமியும், தவிடும் நீங்கப் புடைத்துச் சலிப்பதைத் ‘தீட்டல்' என்ற சொல் குறிக்கின்றது போலும். குற்றித் தீட்டிய தானியத்தின் அளவும் நிறையும் குறைவதுண்டு. கல்வெட்டுக்களில் 'பத்தெட்டுக் குற்றல் அரிசி' என்பது போன்ற குறிப்புக்கள் வருகின்றன. பத்துப்படி அளவு அரிசியை மீண்டும் குற்றிய பின் எட்டுப்படி தரமான அரிசி கிடைக்கும் என்பது இதன் பொருள். இந்த அளவு கூடினால் சரியாகக் குற்றவில்லை என்றும், குறைந்தால் நெல் தரமானது