பக்கம்:அலைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 O லா. ச. ராமாமிருதம்

 அவனது குனிந்த புருவம். ஆச்சரியத்தால் உயர்ந்தது. முதன் முதலாய், கபாலத்தில், அரிசி விழுந்தது. பொறுக்குப் பொறுக்காய், ஒரு அள்ளு அரிசி.

அவன் தலை நிமிர, பார்வை அவள்மேல் பாய்ந்தது. ஆனால் முப்புரத்தையும் எரித்த அது ஆகாயத்தில் எய்த அம்புபோல், பயனற்று, நிஷ்களங்கமான அவளுடைய கண்களைச் சந்தித்துக் கீழே விழுந்தது. அவனது மனதில் களங்கம் புகுந்தது. என்ன இருந்தால்தான் என்ன நர உருவம் எடுத்தால், அதன் நச்சு விடுமோ?

ரிஷிபத்தினியே ஆயினும், ராஜ லட்சணங்கள் அவளுடைய முகத்தில் பிரகாசித்தன. தாருகாவன ரிஷிகளுக்குள்ளேயே, மஹா கொடியவன் வல்லபன். எந்தச் சமண ராஜனிடம் எந்த உபகாரத்துக்கு ஈடாய் இவளைப் பெற்றானோ? ஆனால், அதிலும்தான் என்ன விந்தை! நச்சுமிக்க நாகத்திடம் தானே, மாணிக்கம் உறைகிறது?

அவளது இதயத்தின் விசாலம், அவனுடைய கண்களுக்கு நேர். மயிரின் இருள். அவனது மனதில் புகுந்தி இருளுக்கு இணை. அவளுடைய அங்கங்களை அத்தனை அளவுடனும் உருவுடனும் கடைய, அவள் அப்பன் தொழும் அருகன், எத்தனை நாள் உழைத்தானோ!

அவளது முகத்தில், இவ்வுலகம் பிறந்து, அதில் ஜீவன் அவஸ்தையுறுமுன்னே தேங்கிய அகண்ட அமைதி நிலவியது. அதைக் கண்டதும், அவனது உள்ளம் நடுங்கிற்று; உடல் நடுங்கிற்று: கையில் பிடித்த ஒடும் நடுங்கியது. அவளது உருவம் பதிந்து கனத்த நினைவுடன், அவன் அவ்விடம் விட்டு அகன்றான். நீந்துபவனை நீர்ச்சுழல் இழுப்பது போன்று, அவன் சென்ற காரியத்துக்கு அவனே பலியானான். -

காமன் தன் கறுமைத் தீர்த்துக்கொண்டு விட்டான்.

கிள்ளைகள், முகத்துடன் முகம் சேர்த்து, கொஞ்சி மொழியாடின, கொம்பும் கொடியும் நாணிக் குழைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/118&oldid=1288273" இலிருந்து மீள்விக்கப்பட்டது