பக்கம்:ஆடரங்கு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவின் சவுரி

123


சரஸ்வதியும் ஒப்புக்கொள்ளத்தான் ஒப்புக்கொண்டாள். "ஆனால் எல்லோரையுமே கல்வி வீணாக்கி விடுகிறதா? ஒரு சிலருக்கு ......"

நான் குறுக்கிட்டேன். "நன்கு படித்து. நல்ல அறிவு பெற்றவர்கள் ஒரு சிலர் தவிர வேறு யார் இப்படிச் சிந்தனை செய்து பார்க்கிறார்கள்?" என்றேன்.

"ஜர்னலிஸ்டாக இருக்க வேண்டுமானால் சமயம் பார்த்து முகஸ்துதி செய்யவும் தெரியணும்போல் இருக்கு!" என்றாள் சரஸ்வதி.

உண்மையிலேயே அவள் கெட்டிக்காரிதான்.

நான் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன்.

ண்டி திருநாகேசுவரம் தாண்டி விட்டது. அந்த இரண்டு பெண்களும் தங்களுக்குள்ளேயே பல பழைய ஞாபகங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினார்கள். அவளைத் தெரியுமா? இவளைத் தெரியுமா? அவள் என்ன செய்கிறாள்? இவள் கல்யாணம் செய்துகொண்டு விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்படியாக அவர்கள் இருவரும் தங்களுடன் படித்த பல மாணவிகளையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். எனக்காகப் பேசிய மாதிரியும் தோன்றவில்லை. ஒன்றிலிருந்து ஒன்று என்று நிரம்பவும் இயற்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் கையில் வைத்திருந்த புஸ்தகத்தில் ஈடுபட்டிருப்பவன் போலப் பாசாங்கு செய்தேனே தவிர, என் கவனமெல்லாம் அவர்கள் பேச்சில்தான் இருந்தது. என்ன சுவாரசியமான பேச்சு! அடாடா! எவ்வளவு திவ்வியமான வம்பு! அவர்கள் பேச்சில் எத்தனை கதைகளுக்கு விஷயம் இருந்தது?

"எங்கள் ஹாஸ்டலில் வார்டனுடன் சண்டை போட்டுக் கொண்டாளே, சரோஜா......" என்று சரஸ்வதி சொன்னதும், எனக்கும் அவர்கள் பேச்சில் கலந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/128&oldid=1523816" இலிருந்து மீள்விக்கப்பட்டது