பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டி - 234 காலத்தின் இயற்கை நலங்களை விளக்கி அம்மன்னன் பாடிய பாட்டொன்று அகநானூற்றிலே சேர்க்கப் பெற்றுள்ளது.

பெறுதற்கரிய பேறுகள் பலவும் பெற்று வாழ்ந்தான் அப்பாண்டியன். அவன் மனையாளாகிய பட்டத்தரசி ஒர் அருங்கலைச் செல்வி; சிறந்த கற்பரசி பண்பார்ந்த தலைவர் பலர் அவன் நண்பராய் இருந்தனர். பசுந்தமிழ் வழங்கும் பாண்டி நாட்டைப் பரிபாலனம் செய்யும் உரிமை தான் முன் செய்த நல்வினையாற் கிடைத்தது என்று எண்ணி எண்ணி அவன் இறும்பூது எய்தினான்; குடிகள் நல்ல வண்ணம் வாழ்தல் வேண்டும் என்பதே அவன் குறிக்கோள். இத்தகைய நல்ல மன்னனுக்கும் தொல்லை கொடுக்கத் துணிந்தனர் மண்ணாசை பிடித்த அயல் நாட்டு மன்னர். அன்னார் ஒன்று சேர்ந்து பாண்டி நாட்டின் மேல் படையெடுத்தனர். போர் நேர்ந்தது என்று அறிந்த பாண்டியன் பொங்கி எழுந்தான். வீரப் பெரும்படை திரண்டது. அப் படையின் நடுவே நின்று ஒரு வஞ்சினம் கூறினான் பாண்டியன். ! என் நாட்டின்மீது மாற்றார் படைக யெடுத்தார்கள் ! அவரது கொட்டத்தை அடக்குவேன்! அவர் சேனையை அலற அடிப்பேன் பதறப் புடைப்பேன்! அப்படை புறங்காட்டி ஒடக் காண்பேன் ! அப்படிக் காணேன் ஆயின், காதல் மனையாளைப் பிரியும் தகவிலன் ஆகக் கடவேன்; மாவன் முதலிய மெய்யன்பர்களின் நட்பினை இழந்தவன் ஆகக் கடவேன் நெறி முறை தவறிய கொடுங்கோலன் என்று இகழப் படுவேனாக தென்னாடு காக்கும் பாண்டியர் குலத்திற் பிறவாது புன்னாடு காக்கும் புறக்குடியிற் பிறப்பேனாக என்று பேசினான்.

அம்மன்னன் பெயர் கொண்ட பூதப்பாண்டி என்ற ஊரின் அருகே பறளியாற்றில் உள்ள அணைக்கட்டு பாண்டியன் அணை என்றே இன்றளவும் அழைக்கப் படுகின்றது. இவ் அணைக்கட்டில் பறளியாற்று நீரை