பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உலகை அறிந்த இடம்; ‘உவக வரலாறு’ என்ற அரிய நூலை நேரு நமக்கு அளித்திருக்கிறார். அவரைத் தலைமையாகக் கொண்டதால்தான் பாரத நாடு வெளியுலகத் தாக்குதலுக்கு இடம் கொடுக்க முடிந்தது. அன்னை இந்திரா உலகக் குடிமகளாக ஆக்கிக் கொள்ள அறிவு பெற்ற இடம் இது; இன்று பாரதப் பிரதமர் நாற்பதாவது வயதிலேயே மக்கள் தலைவராக இயங்கி உலகம் மதிக்கத்தக்க முற்போக்குச் சிந்தனை கொள்ளக் காரணமாகப் பயிற்சி பெற்ற தேசம் அது. பாரத நாட்டுப் பண்புக்கும் மேலை நாட்டு வளர்ச்சிக்கும் மதிப்புத் தரும் தலைமையில் பழைய மதிப்புகளை இழக்காமல் புதுமையை ஏற்று வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்தத் தெளிந்த ஞானம் அவருக்குக் கிடைத்தது. அவர் பிறந்த மண் இது; வளர்த்துக்கொண்ட தேசம் அது, இரண்டின் கலப்பே பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி.

வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன் இந்த நாட்டு மகாகவிகள்; அவர்கள் காட்டிய வாழ்வியல் சுதந்திரக் கோட்பாடுகளையே தமிழகம் பின்பற்றுகிறது. கலைவளமும் பண்பாடும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அதேபோல அந்த நாட்டில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி போன்ற கவிஞர்கள் பெர்நாட்ஷா போன்ற நாடக ஆசிரியர்களும் டிக்கன்ஸ் போன்ற கதாசிரியர்களும் அந்த நாட்டின் சிந்தனைச் சிற்பிகளாக விளங்கினர். நம்முடைய கலாச்சாரமும் இந்த எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கால் தெளிவும் மாற்றமும் அடைந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்று நம் கலாச்சாரம் தனித்தன்மை உடையது என்று முழுவதும் கூறமுடியாது. மேலை நாட்டுத் தாக்கம் தேவையான அளவிற்கு ஏற்பட்டுள்ளது. அப்படியே பின்பற்றாமல் நல்லது ஏற்று அல்லது தள்ளி நாம் வாழ்ந்து வருகிறோம்.