பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5
விடுதலைப் போரில்
தமிழ்ப் பத்திரிகைகள்

திக்கவெறி எனும் ஆணவ சிகரத்திலே வீற்றிருக்கும் ஆங்கிலேயர்களின் அகம்பாவ ஆணிவேரை அறுத்தெறியவும், இந்தியத் திரு நாட்டுக்குரிய விடுதலை ஜோதியை நாடு முழுவதும் ஒளிபடரச் செய்யவும், பம்பாய் நகரிலுள்ள கோகுல் தாஸ், தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், 1885 - ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 28 - ஆம் நாள் நண்பகல் 12:15 மணிக்கு, டபிள்யூ.சி. பானர்ஜி சுதந்தர விளக்கை ஏற்றி வைத்து ஒளி பரப்பினார்! தாதாபாய் நவ்ரொஜி அந்தக் காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

தமிழ் நாட்டின் தலை நகரமான சென்னை மாநகரிலே வசித்து வந்த முக்கிய தலைவர்களும்,‘சுதேச மித்திரன்’, ‘இந்து’ ஆங்கில பத்திரிகை ஆசிரியர்களும் ‘தேசிய இயக்கப் பிரதிநிதிகளும்’ இந்த அகில இந்தியத் தேசியப் பேரவைக் காங்கிரஸ் கூட்டத்திற்குச் சென்று கலந்து கொண்டார்கள்.

வங்கக் கிறித்துவரும், பாரிஸ்டருமான பானர்ஜியின் பெயரை, வங்க மாநிலத்தில் ஐ.சி.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்த ஆலன் அக்டேவியன் ஹியூம் என்பவர் தனது பதவியை விட்டு விலகி, காங்கிரஸ் பேரவைத் தலைவரை அந்தக் கூட்டத்தில் முன் மொழிந்தார்.