பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

135


ஆத்திரமூட்டுகிறது. இந்தக் கொடூரமான இனப்படுகொலை விழாவுக்குக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் போகக் கூடாது. போனால், பல இலட்சக்கணக்கான திராவிட மக்களாகிய நாங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே இராமன் உருவத்தைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று” தமிழ் மக்கள், அதாவது திராவிடர்கள் ஆயிரக்கணக்காக தந்திகளைக் கொடுத்தார்கள் குடியரசு தலைவருக்கு பிரதமருக்கும்.

உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த பெருமக்கள், இலட்சக்கணக்கான மக்கள் குரலை அன்று மதித்தார்களா? கேட்டார்களா? இந்தியா மதச் சார்பின்மை நாடுதான் என்பதை அவர்கள் நிரூபித்தார்களா? இல்லையே! ஏன்?

எனவே, 25.12.74 அன்று சென்னை மாநகரில் திராவிட இனம் ஒன்று திரண்டு மாலை 6.50 மணிக்கு இராமன், சீதை, இலட்சுமணன் என்ற உருவங்களுக்குத் தீயிட்டு, ‘இராவண லீலா’ என்ற ஒரு விழாவைக் கொண்டாடினார்கள். இந்த நிலை யாரால், எதற்காக, ஏன்? நடைபெற்றது என்பதைச் சிந்திக்கும் போதுதான், ‘திராவிடன்’ என்ற ஓர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் நாகரிகம் உண்டு’ என்ற தெளிவு எல்லார்க்கும் ஏற்படுகின்றது.

இராவணன் திராவிடனா? என்றால், அதையும் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடத்தி, இராவணனை ஒரு பிராமணன் என்று குறும்புப் புராணம் மூலம் எழுதி நிரூபிக்கிறார்கள்? அவ்வாறானால், ஆரிய இராவணனை ஆரிய ராமனை விட்டே தீயிட்டுக் கொளுத்த விடலாமா? என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

இந்தக் கேள்வியின் பதில் என்ன? இராவணன் திராவிட மன்னன்தான் என்பது தானே? தற்போது தமிழ்நாட்டில் ‘செல்லமே’ என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து ஒடிக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தில் ஒரு பாட்டு :- அதாவது திராவிட மறவனும் ஆரிய அழகு சுந்தரியும் மாறி மாறி பாடிடும் டூயட் பாடல் அது? என்ன தெரியுமா? அந்த பாடல்?

ஆரிய உதடுகள் என்னது;
திராவிட உதடுகள் உன்னது;