பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

159


பாடல்களையும், அவற்றுள் பல தத்துவம் போதிக்கும் சித்தர்களைப் போலவும் காட்சியளித்து கொண்டிருக்கின்றன.

அறிஞர் அண்ணா அவர்கள் இயற்கை அடைந்தபோது, அவர் எழுதிய ‘சொர்க்கத்தில் அண்ணா’ என்ற நூல் உரைநடை பைபிளாக இன்றும் நடமாடிக் கொண்டிருக்கின்ற அளவுக்கு அவர் தனக்கென ஒரு தனித் தமிழ்பாணி நடையுடைய பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்தார். இத்தகைய தமிழ்த் தும்பி அமெரிக்காவுக்கு தமிழ்த் தொண்டாற்றச் சென்றபோது அங்கே மரணமடைந்தார்.

தமிழ்நாட்டின் அந்த இரண்டாவது தமிழக அரசவைக் கவிஞரை, அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.; கவிஞரது புகழுடலைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து புகழடைந்தார்.

காஞ்சி மணிமொழியார்

‘போர் வாள்’ இதழ்

காஞ்சி மணிமொழியார் என்ற சுயமரியாதை வீரர், ‘போர் வாள்’ என்ற வாரப் பத்திரிகையை நடத்தி திராவிடர் இயக்கத்திற்கு அருந்தொண்டாற்றினார். அவருடன் அவரது மகனார் மா. இளஞ்செழியன், பி.ஏ., ஹானர்ஸ்; காஞ்சி கலியாணசுந்தரம் போன்றவர்கள் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றி, திராவிடரியக்கப் பத்திரிகை உலகிலே ஒரு புரட்சி வாள் போல, அதைக் கூர்மைத் தீட்டி, எதிரிகளை வீழ்த்தும் கருவியாக வார வாரம் வீசி வந்தார்கள்.

‘போர் வாள்’ இதழின் ஆசிரியர்க் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மா. இளஞ்செழியன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்குப் பேராசிரியராகச் சென்று விட்டதால், அந்த இடத்திற்கு இந்தப் புத்தக ஆசிரியரும் ‘திராவிடன்’ துணையாசிரியராகவும் இருந்த என்.வி. கலைமணி துணையாசிரியராக அமர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஓர் அரசியல் கட்சிப் பத்திரிகை, திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சினிமாவுக்கு மலர் வெளியிட்டது, பத்திரிகை உலகில் இதுதான் முதல் முறை என்.வி. கலைமணி முழுப் பொறுப்பை ஏற்று போர் வாள் வெளியிடும் ‘பராசக்தி மலர்’ என்ற பெயரில் வெளியிட்டார்.