பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


யனின் முன்னோர்களது ஊர். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மாணவர், எம்.ஏ. பட்டதாரி. இவர் வாலிப வயதில் தந்தை பெரியாரைப் போல கறுந்தாடி வைத்திருந்ததால், இளந்தாடிப் பெரியார் என்று இவரை திராவிடரியக்கம் அழைத்துப் பெருமைப்படுத்தியது.

பல்கலைப் படிப்பின்போதே நாவலர், அறிஞர் அண்ணா அறிவு வட்டத்தில் தொடர்புடையவராக இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், இலக்கிய வட்டத்துத் தேனியாகவும், குறிப்பாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை உணர்ச்சித் ததும்ப மேடைக்கு மேடை முழக்கமிட்டு, அவரது கவிதைத் திறனை நிலை நாட்டியவராகவும், தந்தை பெரியார் சிந்தனைகளின் முன்னோடியாகவும் விளங்கியவர். இவரது இளவல் இரா. செழியன் என்பவர் நாடாளுமன்ற அரசியல் வித்தகராக விளங்கி வாழ்பவர்.

நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற மாதமிரு முறைப் பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ், அரசியல், கலை, இலக்கிய ஆய்வு ஏடாக வெளி வந்து கற்றார் பேராதரவையும், கழகத் தோழர்களின் பாராட்டையும் பெற்றதால் விற்பனையும் பெருகியது. மேல் நாட்டு மேதைகளது மக்கட் தொண்டுகளை ‘மன்றம்’ மாதந்தோறும் வெளியிட்டு திராவிடரியக்கத் தோழர்களை அறிவு சுடர்களாக வளர்த்த பெருமை மன்றம் பத்திரிகைக்கு உண்டு.

நாவலர் சிறந்த பண்பாளர்; ஒழுக்கமே உருவானவர்; மாற்றாரும் மதிக்குமளவிற்கு மதி நலமிக்கவர். கோடையிடி பேச்சாளர்; புள்ளி விவரம் தராமல் எந்தப் பொருளையும் மேடையில் பேசாதவர். தமிழ் இலக்கியத்தை மறுமலர்ச்சி நோக்கோடு பார்த்து எழுதும் திறமையாளர்.

அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அமைச்சரவைகளில் இரண்டாவது இடம் பெற்ற அமைச்சராக அமர்ந்த மரியாதை பெற்றவர். அவருடைய மன்றம் பத்திரிகை ஓர் இலக்கிய மணம் பரப்பும், அரசியல் உணர்வூட்டும், சுயமரியாதைச் சுடருதறும் பத்திரிகையாகத் தமிழ்நாட்டில் பணி புரிந்தது