பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு


இந்தியாவிலும், தென்னாப்ரிக்காவிலும் கிரேட் பிரிட்டன் பேரரசு அனுபவித்துக் கொண்டிருந்தது.

இந்தக் காலக் கட்டத்தில் தேசியக் காங்கிரசுக்கு ஆதரவாகவும், நாட்டின் விடுதலை உணர்ச்சிகள் ஆங்காங்கே மக்கள் இதயக் கடலிலே ஆர்த்த அலைகளாய் பொங்கி, எழுந்து, புரண்டு, உருண்டு பேரிறைச்சல்களை எழுப்பிக் கொண்டிருந்த நேரமாக இருந்தமையால், இந்திய மாநிலங்கள் தோறும் அவரவர் தாய் மொழியில் பத்திரிகைகள் தோன்றி ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதிப் போராடி அதிரடித்துக் கொண்டிருந்தன.

பத்திரிகைச் செய்திகளின் உணர்ச்சிகளை நாள்தோறும் படித்து வந்த மக்களின் சுதந்தர எழுச்சி வேகத்தை, ஆங்கில ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகி வருவதைக் கண்ட ஆங்கில வெறிபிடித்த அதிகாரிகள்; எப்படியாவது பத்திரிகைகள் எழுச்சியை அடக்கி ஒடுக்கிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

அந்தத் திட்டத்தின் எதிரொலிதான், 1910-ஆம் ஆண்டில் வெளிவந்த பத்திரிகையாளர் சட்டம். இந்தச் சட்டம் லார்டு லிட்டன் காலத்தைய சட்டத்தைவிட மிகக் கடுமையாக இருந்தது.

இந்தச் சட்டத்தின் அடக்குமுறை ஆற்றல் என்ன தெரியுமா? பத்திரிகை நடத்துவோர் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தங்களது பத்திரிகைக்கு முன் ஜாமின் பணம் கட்ட வேண்டும். செய்த குற்றத்தையே மீண்டும் பத்திரிகைகள் செய்யுமானால், ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பிணையத் தொகையை இழக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வாழ்க்கை நடத்துவதற்காக வருவாய் தேடும் அச்சகத்தையும் அந்தச் சட்டம் பறிமுதல் செய்துவிடும்.

ஆட்சிக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால், அஞ்சலக அதிகாரிகள் அந்தப் பத்திரிகைகளை அந்தந்த ஊர் முகவர்களுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துவிடும் அதிகாரத்தையும் ஆங்கில ஆட்சியர் அஞ்சலகத் துறைக்கு அளித்திருந்தார்கள்.