பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

239


(Cartoon) சட்டமன்ற உறுப்பினர்கள் பணிகளை அவமதித்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் சட்டமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்தச் சம்பவம் உரிமை மீறலுக்குரிய எடுத்துக்காட்டாக உள்ளது.

1. பத்திரிகைக்குப் பாதுகாப்புச் சட்டம்:

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றப்பிறகு, 1956-ம் ஆண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் வெளியிடும்போது தவறு ஏற்பட்டுவிட்டால் தண்டனை தருவதோடு மட்டும் நிற்காமல், பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்ற எண்ணம் ஃபெரோஸ் காந்தி Feroz Gandhi என்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டது. இந்தச் “சட்டத்திற்கு The Parlimentary Proceedings, Protection of Publication Act - 1956” என்று பெயர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் பிரசுரிக்கும்போது, அவற்றுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் வாதாடி சட்டம் கொண்டுவந்ததால் அந்தச் சட்டத்திற்கு ஃபெரோஸ் காந்திச் சட்டம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் இது:

‘நாடாளுமன்ற செயற்பாடுகளை, தீய குறிக்கோளோடு பத்திரிகைகள் தவறாக வெளியிட்டுள்ளன என்பதை உறுதி செய்யப்பட்டால்தான் - தண்டனை வழங்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவதூறுகளாக இருந்தாலும் - அவை உண்மைகளாக இருந்தால், அவற்றை வெளியிடுவது உரிமை மீறலாகாது’ என்று ஃபெரோஸ் காந்திச் சட்டம் கூறுகின்றது.

இந்தியாவில் நெருக்கடி காலச் சட்டம் வந்தபோது Emergency ஃபெரோஸ்காந்தி சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. நெருக்கடி முடிந்ததும் இந்தச் சட்டம் மீண்டும் உயிர்பெற்று அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.