பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

பத்திரிகைச் செய்திகளை வழங்கும் உலக, இந்திய அமைப்புகள்!


அந்தச் செய்திகளைப் படித்து நாட்டு நிலைகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஆனால், ஒவ்வொரு செய்தித் தாளும், அவை எவ்வளவுதான் பண வசதிகளைப் பெற்றிருந்தாலும், ஆங்காங்கே செய்தியாளர்களை நியமித்துச் செய்தி சேகரிப்பதென்பது மிகக் கடினமான வேலையாகும். ‘இந்து’ போன்றபெரிய பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றுக்குத்தான் அத்தகையை சக்தி இருக்க முடியும்! எல்லா பத்திரிகைகளாலும் முடியாது.

அதனால்தான் செய்திகளைத் திரட்டி மற்ற நாடுகளுக்கு வழங்கிட; ஒவ்வொரு நாட்டிலும் செய்தி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை கூட்டுறவு மூலமோ அல்லது தனியார் வாயிலாகவோ நடைபெற்று வரும் செய்தி நிறுவனங்களாகும்.

இந்தச் செய்தி நிறுவனங்கள் பத்திரிகையாளர்களிடம் பணம் பெற்று உறுப்பினர்களாக்கிக் கொண்டு உரிய செய்திகளை உலகுக்குத் தருகின்றன. இதழ் நடத்தும் நமக்கும் பணம் பலம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி நிறுவனங்களில் உறுப்பினராகிச் செய்திகளைப் பெறலாம்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள செய்தி நிறுவனங்கள், உலகத்திலுள்ள புகழ் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து, உறுப்பினராகி, அந்தந்த நாட்டுச் செய்திகளை அவை பெற்று, அவற்றிலே இருந்து தங்களது நாடுகளிலுள்ள பத்திரிகை உறுப்பினர்களுக்குச் செய்திகளைக் கொடுத்து வெளியிடச் செய்கின்றன.

இத்தகைய உலகச் செய்தி நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு பெரிய நாடுகளிலும் நடந்து வருகின்றன.

அமெரிக்கா, இரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலே இத்தகைய உலகச் செய்தி நிறுவனங்கள் திறமையாக இயங்கி வருகின்றன.