பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

301


தவறாகப் பயன்படுத்துதல், அடிதடிச் சண்டை, இலஞ்சம் பெறுதல் போன்றவை எல்லாமே கிரைம் குற்றம் (Crime News) புரியும் செயல்களாகின்றன.

பத்திரிகைகள் நிலை :

மேற்கண்ட வகையானச் குற்றச் செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இதை மக்களும் விரும்பி ஆர்வமாகப் படிக்கின்றார்கள். இவ்வாறு Crime Newsகளை வெளியிடுவது நாட்டுக்குச் செய்யும் தொண்டுகள் தானா என்று சில நடுநிலையாளர்களும் சிந்திக்கிறார்கள்?

பொது மக்களில் வேறுசிலர் குற்றச் செய்திகளை வெளியிடுவது சமுதாயச் சேவை அல்ல; ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அல்லது காவல் துறை ஊழல் குறித்தக் குற்றச் செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தருமத்திற்கு விரோதமானது; அந்தச் செய்திகளைப் படிக்கும் மக்கள் சமுதாயத்திற்கு அவை ஊறு விளைவிப்பன என்றும் சிந்திக்கிறார்கள். எனவே, குற்றச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் மக்களிடையே நிலவுகின்றன.

நாட்டில் நடைபெறும் எந்தவிதமான சம்பவங்களையும் கற்பனைக் கலவாமல்; உண்மையை உண்மையாக வெளியிடுவது பத்திரிகைகள் கடமை. அவ்வாறு வெளியிடாமல் மறைத்து விட்டால் நாட்டில் நடக்கும் நன்மை - தீமைகள் பற்றிய விவரங்கள் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும். அது சமுதாய அநீதியுமாகும் என்பர் பலர்!

பத்திரிகைகளின் தர்மத்திற்குப் பங்கம் நேராமல், இதழ்களின் மரியாதைக்கு நேர்மைக் குறைவு ஏற்படாமல், சமுதாயத்தில் மேலும் குற்றங்கள் மேம்படாமல், காவல் துறை குற்றக் கண்டுபிடிப்புக்கு உதவும் வகையில் குற்றங்களைத் தொடர்ந்து செய்ய மக்களைத் தூண்டாமல், எச்சரிக்கையோடு அவர்கள் வாழும் வகையில், பத்திரிகைகள் பொறுப்புணர்ச்சியோடும், கண்ணியத்தோடும், குற்றச் செய்திகளைத் தரத்தோடும் - மனசாட்சிப் பண்புகளோடு வெளியிட்டு வரும் அவற்றின் தொண்டு மனப்பான்மைகளின் தன்மைகளையும் மக்கள் பாராட்டுகிறார்கள்.