பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

15


குறிப்பிடுகையில், தனக்கு ஆண் மகவு வேண்டுமென்றால், மணமகன் மணமகளின் கட்டை விரலைப்பற்ற வேண்டும்; மகள் வேண்டும் என்று விரும்பும் போது, வெறும் விரல்களை மட்டும் பற்ற வேண்டும்; ஆண், பெண் என்று இருபால் சந்ததியும் வேண்டுமென்று விரும்புபவன், கட்டை விரலுடன் ஏனைய விரல்களையும் சேர்த்துப் பிடிக்கட்டும் என்று அறிவிக்கிறது.

இந்த விதிமுறையை இன்றும் திருமணம் நடத்தி வைக்கும் மேதகு புரோகிதர் நினைவுபடுத்தும் வண்ணம், மணமகனிடம், பெண்ணின் கட்டை விரலைப் பிடித்துக் கொண்டு வரவும் என்று கூறுகிறார். இல்லாவிட்டால் பெண் பெண்ணாகப் பிறக்கும் என்று கூட்டத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதக்கிழவர் முண முணப்பதும் காதில் விழுகிறது.

வனங்களில் குழுக்காளாக மனிதர் வாழ்ந்த காலத்தில், தாய்த்தலைமைக் குழுக்களில், அவள் விருப்பமின்றி எந்த ஆடவனும் அவளை அணுக முடியாது. தன் விருப்பத்தை அவள் விரல்களைக் குவித்து ஓர் ஆடவனுக்குத் தெரிவிப்பதன் வாயிலாக அவன் அவ்விரல்களைப்பற்றி உடன் படுவான். தந்தை நாயகக் குழுக்களிலோ, ஆண் பெண்ணின் கட்டை விரலைப்பற்றித் தன் இச்சைக்கு உடன் பட அழைப்பான். எனவே, தாயாண்மைக் குழுவிலிருந்து பெண் கொள்ளும் போது, அவளை அவன் கட்டை விரலைப் பற்றித் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்தான் என்றும், தாயாண் குழுவுக்கு வருபவன் அவள் விரல்களைப்பற்றிக் கொண்டான் என்றும், ஊகிக்கலாம். நாளடைவில், தந்தை நாயகமே மேல் நிலையாதிக்கமாக, சமுதாயம் முன்னேறி வந்தபோது, பெண்ணைக் கட்டை விரலைப் பற்றி ஆதிக்கத்துக்குட் படுத்துவதே பரவலாக வழக்கில் வந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையைப் பின்பற்றி திருமண விதிகள் ஆண்சந்ததி; பெண் சந்ததி என்று முறைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று கொள்ளலாம். இது ஒருவகை அச்சுறுத்தல் போலவும் அறிவுத்தப்படுகிறது இல்லையா?