பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. தாய்மையின் வீழ்ச்சி


னித சமுதாயத்தின் மிகத் தொன்மையான இலக்கியச் சான்றாகக் கருதப்படுகிறது ருக்வேதம். இராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கான பல்வேறு மூலக்கூறுகள் இந்த மாபெரும் தொகுப்பில் இருந்தே பெற்றிருக்கப் பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

ஆதிமனிதர் வாழ்விலிருந்து தந்தையாதிக்கச் சமுதாயம் நிலை பெற்று வாழும் வாழ்வு வரையிலான பல அம்சங்களைப் பளிச்சென்று காணமுடிகிறது.

ஒருவகையில் இப்பாடல்களின் பல அம்சங்களும், இயற்கைச் சக்திகளின் இயக்கங்களை விளக்கும் உண்மைகள் என்று கொள்ளப்படுகிறது என்றாலும், பாடல் வரிகளில் பிரதிபலிக்கும் நேர்ப்பொருள், அக்கால சமுதாய மாந்தர் வாழ்நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கிறது.

ருக்வேதம் காட்டும் முதல் ஆதாரமான பெண்கொலை, இந்திரன் விருத்திராசுரனின் அன்னை தனுவை, தன் வச்சிரா யுதத்தால் அடித்துக் கொன்ற செயலாகும்.

இந்த வரலாற்றில், தனுவாகிய அசுர அன்னை, தன் மகன் விருத்திரனைத் தன் கீழ்நிறுத்திக் கொண்டு, தாய்ப்பசு தன் கன்றைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்ததாகச் சொல்லப் படுகிறது. இந்திரன், அவளைத் தாய், பெண் என்று கூடப்பாராமல் தன் வச்சிராயுதத்தால் அடித்து வீழ்த்தினான். இது பாவம் என்றே கருதப்படுகிறது.

இந்தப் பாவத்தை அவன் உலக நன்மைக்காகச் செய்தானாம். அந்த வச்சிராயுதத்தைத் தயாரிக்க, ததீசி முனி தம் முதுகெலும்பையே ஈந்தார் என்று புராணங்கள் விளக்குகின்றன.