XVI
மகாவித்துவான் ரா. இராகவையங்கார்
சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், பதிப்பாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், சமய நூலறிஞர், மொழி நூலறிஞர் என்று இத்திறத்தாருள் எல்லாம் முன் எண்ணத் தக்கவராய் விளங்கியவர் மகாவித்துவான் அவர்களாவர். தமிழ் உலகில் பெரும்பணி புரிந்த பேராசிரியர்களுள் இவர் தனியிடம் பெற்றுத் திகழ்பவராவர். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இலக்கியமாக இலங்குபவர் மகாவித்துவான் இராகவையங்கார் அவர்கள். இவர்கள் புகழ் தமிழுள்ள வரை நிலைத்து நிற்கும். இவர்தம் மெய்ப்புகழைக் குறித்து நாவலர் சோமசுந்தரபாரதியார் பின்வருமாறு புகழ்மாலை சூட்டியுள்ளார்:
'அறம்கூறும் வள்ளுவனாம் அருங்கவிசொற் கபிலனுமாம் அஞ்சா நெஞ்சத் திறங்கூறும் கீரனவன் திட்பமதி யொட்பமிகத் திகழும் செஞ்சொல் மறங்கூறும் பாவரசன் வன்புகழா ரிராகவப்பேர் வம்பக் கம்பன் புறங்கூறும் பழியஞ்சும் புலவனை நம் தமிழிழக்கும் புதுமை என்னே! 'அம்புவியாள் செம்பியர்மூ வரசர்தொழத் தமிழாண்ட கூத்தர் போல செம்பியர்சீர்ச் சேதரசர் மூவர்முறை முதல்வரிசைச் சிறப்புச் செய்யத் தம்புலமை வீறுபுதுச் சங்கச்செந் தமிழ்த்தலைமை தாங்கி ஓங்கிப்" பம்பிசையார் பாவலர் இராகவனார் பெருமையெவர் பகர வல்லார்'