பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு மல்லர்கள்

31


 கேட்பதுண்டு குன்றின் உச்சியிலிருந்தால்தான் சுற்றியுள்ள காட்சிகளைக் கண்டுகளிக்க முடியுமென்றும், எந்த நேரமும் இளந்தென்றல் வீசுமென்றும், தாம்போதி வேலை முடிந்த பிறகு குன்றிலே தான் குழாய் வைக்கப்போவதாகவும் அவன் பதிலுரைப்பது வழக்கம்.

ஆனால், உண்மையில் குகுல்லினுக்காகவே அவன் குன்றின் மேல் குடியிருந்தான். அங்கிருந்து அவன் குகுல்லின் என்று வந்தாலும் எளிதில் கண்டுகொள்ள முடியும்.

மக்கெளல் தன் வீட்டுக்குள்ளே நுழைந்ததும் மனைவியின் உடல்நலம்பற்றி விசாரித்தான். சிறிது நேரத்திற்குப் பின் அவள், "நீங்கள் என்ன விரைவிலே வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டீர்கள்” என்று கேட்டாள்.

"உன்மீதுள்ள அன்பினால்தான். இது உனக்கே தெரியுமே!" என்றான், கணவன்.

ஊனாக்குடன் அவன் இரண்டு மூன்று நாள்களை இன்பமாகக் கழித்தான். ஆனால், அவன் மனத்தில் குகுல்லினைப் பற்றிய சிந்தனை அகலவேயில்லை. அவனுடைய கவலை என்ன என்பது தெரியாமல் அவன் மனைவி அதனைக் கண்டுபிடிக்கப் பலவாறு முயன்று பார்த்தாள்.

கடைசியாக அவனே தன் கவலையைக் கூறிவிட்டான்: "இந்தக் குகுல்லின் நினைவுதான் என்னை வருத்தி வருகிறது. அவனுக்குக் கோபம் வந்தால் நிலமே ஆடும்படி மிதிப்பானாம், இடியை நிறுத்திவிடுவானாம், வச்சிராயுதத்தைச் சப்பையாக்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரிகிறானாம்!”

அவன் ஆத்திரத்துடன் பேசும் பொழுது வலக்கைக் கட்டைவிரலால் வாயைத் தட்டிக்கொள்வது வழக்கம். அதே போல அப்பொழுதும் செய்தான். அதைக் கண்டு ஊனாக், "என் பேரில் ஒன்றும் கோபமில்லையே?’ என்று கேட்டாள்.

"இல்லை, இல்லை. விரலைக் கடித்துக்கொள்வது என் வழக்கந்தானே!"

"கடித்துக் கடித்து இரத்தம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”