331
என்று உள்ளமை குறிக்கப்பட்டுள்ளது. அதுவே எதுகை நோக்கி இனிதின் இயைவதாக இருந்தும், இப்பாடம் மேற்கொண்டமை என்னென அறிய முடியவில்லை!
“ஆனை யாயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி”
என்பது பரணியுடையான் பற்றியது. இச்செய்தி,
“ஏழ்தலைப் பெய்த நூறுடை இபமே
அடுகளத் தட்டாற் பாடுதல் கடனே”
என்கிறது பன்னிருபாட்டியல். ஆனால் இந்நூற்பா சங்கப் படியில் இல்லை என்பது பதிப்பாசிரியர் அடிக்குறிப்பு. ஆதலால் இவ்வாறு படியுடையார் எண்ணம் போலெல்லாம் பன்னிருபாட்டியலைப் பெருக்கியுள்ளனர் எனலாம். யாப்பியல் நூற்பெருக்கக் காலம் ஒன்றிருந்தமை யாப்பருங்கல விருத்தியால் அறியப்படுவது போல், பாட்டியற் பெருக்கக்காலம் ஒன்று இருந்ததைப் பன்னிருபாட்டியல் காட்டுகின்றது எனலாம். ‘புராணம் இல்லையேல் கோயிலில்லை’ என்றொரு நிலை பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலத்தில் இருந்தமை எண்ணத் தக்கது.
பாட்டியல் தொகுப்பாளர் கலைமகள் வழிபாட்டாளர் ஆகலாம்.
பதிப்பு
மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக 1904இல் முதற்பதிப்பும் 1951-இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள.